1,800 விடுதலைப் புலிகளை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த இலங்கை அதிபர் ராஜபக்சே
கொழும்பு: இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளில் 1,800 பேரை ராஜபக்சே அரசு இன்று விடுதலை செய்துள்ளது.
இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டி விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடைய நீண்ட காலமாக போர் நடந்து வந்தது. அந்த போர் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்தது. இறுதி கட்டப்போரின் போது இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளையும் அவர்கள் இருந்த பகுதிகளில் இருந்த லட்சக் கணக்கான தமிழ் மக்களையும் ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்தது.
இந்த கொடூரச் செயல்கள் எல்லாம் சேனல் 4 உலகிற்கு தெரிய வைத்தது. அந்த வீடியோ ஆதாரங்களைப் பார்த்தவர்கள் ஆத்திரமும், வேதனையும் அடைந்தனர். இறுதி கட்டப்பபோரின்போது சுமார் 11,000 விடுதலைப் புலிகள் சரண் அடைந்தனர்.
சரண் அடைந்தவர்களின் கைகளை கட்டி, அவர்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொன்றது இலங்கை ராணுவம். பெண் விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தினர் கற்பழித்துக் கொன்றனர். இந்த போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நிறுத்த வேண்டும் என்று உலகத் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
எந்த குற்றச்சாட்டு கூறியும் மசியாத இலங்கை அரசு தற்போது 1,800 விடுதலைப் புலிகளை விடுதலை செய்துள்ளது. இன்னும் 1,000 பேர் மறுவாழ்வு மையங்களில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை அதிபர் அலுவலக வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே, விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications