வாச்சாத்தி: கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க பாமக கோரிக்கை
சென்னை: வாச்சாத்தியில் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஒவ்வொருவருக்கும் முறையே ரூ. 2 லட்சமும், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மனித நாகரீகத்திற்கு சற்றும் ஒவ்வாத வகையில் தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடியின மக்கள் மீது 1992-ம் ஆண்டு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு நடத்திய வன்கொடுமைகளுக்கு 19 ஆண்டுகளுக்குப் பின் நீதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 215 பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தாமதமாக நீதி கிடைத்தாலும் பழங்குடியின மக்களுக்கு நீதி வழங்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அரசு அதிகாரிகள் என்பதாலும், அவர்களின் உயர் அதிகாரிகளுக்கும் இது தொடர்பு இருந்தது என்பதாலும், இந்த வழக்கு விசாரணையை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மலைவாழ் மக்கள் சங்கத்தினரும், நடுவண் புலனாய்வுப் பிரிவினரும் இந்த முட்டுக்கட்டைகளை தகர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தந்துள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது. எனினும், வாச்சாத்தியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு மனக்குறை அளிக்கிறது.
வாச்சாத்தி வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அதிக இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதித்துறை உயர் அமைப்புகள் ஏற்கனவே ஆணையிட்டுள்ளன. வாச்சாத்தியில் உள்ள 655 பேர் அதிகாரிகளின் அத்துமீறலால் பல்வேறு கொடுமைகளுக்குள்ளானார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆடு, மாடுகள், கோழிகள் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டன.
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு இரண்டு கட்டமாக ரூ. 61.96 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கியுள்ளது. 655 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 349 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.
வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதுடன், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு மிகக்குறைந்த இழப்பீடு வழங்குவது மிகப்பெரிய அநீதியாகும். எனவே, வாச்சாத்தியில் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஒவ்வொருவருக்கும் முறையே ரூ. 2 லட்சமும், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 5 லட்சமும் இழப்பீடாக வழங்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications