தீர்ப்பை வரவேற்று ஆடிப் பாடி, பட்டாசு வெடித்து வாச்சாத்தி மக்கள் கொண்டாட்டம்
அரூர்: 16 ஆண்டு கால பாலியல் கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அத்தன பேரும் குற்றவாளிகள் என்று தர்மபுரி கோர்ட் தீர்ப்பு வழங்கியதை வாச்சாத்தி கிராம மக்களும், பாதிக்கப்பட்ட பெண்களும் ஆடிப் பாடி கொண்டாடி பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளனர்.
வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் 1992ம் ஆண்டு நடத்திய அட்டூழியம் மற்றும் பாலியல் பலாத்கார அட்டகாசம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என தர்மபுரி செஷன்ஸ் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் உயிருடன் உள்ள 215 பேருக்கும் நீதிபதி குமரகுரு தண்டனையையும் அறிவித்தார்.
இது வாச்சாத்தி கிராமத்தில் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதிப் பெருமூச்சையும் ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பை வரவேற்று அவர்கள் தங்களது குல வழக்கப்படி கும்மியடித்தும், பாடல் பாடியும், குலவையிட்டும் மகிழ்ந்தனர். மேலும் பட்டாசு வெடித்தும் அவர்கள் கொண்டாடினர்.
வாச்சாத்தி கிராமத்தில் உள்ள குல தெய்வக் கோவிலான மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது நேர்த்திக் கடனையும், வேண்டுதலையும் அப்போது கோவிலில் செலுத்தினர்.
தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு இத்தனை காலம் கழித்துத் தண்டனை கிடைத்திருப்பதை வாச்சாத்தி மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வதால் ஊரே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications