கரூர்: ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் என். மணிராஜ்
கரூர்: உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் ராகு காலத்தில் தனது வேட்பு மனுவை தி.மு.க.வேட்பாளர் என்.மணிராஜ் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாரும் செய்ய துணியாத வகையில் ஒரு துணிச்சலான செயலை செய்துள்ளார் தி.மு.க. வேட்பாளர் என்.மணிராஜ். இது குறித்து ருசிகரமான தகவல்கள் இதோ கரூரில் பிரபலமான வழக்கறிஞர் என். மணிராஜ். இவர் ஆரம்பம் முதலே தி.மு.க. மீதும் அதன் தலைவர் கருணாநிதி மீதும் மிகுந்த பற்று கொண்டவர்.
உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் நகராட்சி தி.மு.க. சார்பில் 16வது வார்டு வேட்பாளராக என். மணிராஜை கட்சி தலைமை அறிவித்து. கடந்த அக்டோபர் 11ம் தேதியன்று மகளாய அம்மாவாசை என்பதால் அன்று கரூர் நகராட்சியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
ஆனால், அன்று தனது மனுவை தாக்கல் செய்யாமல், இதற்கு அடுத்த நாள் பாட்டியம்மை என்று கூறப்படும் பிரதமை நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால், அன்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யமாட்டாடர்கள் என்று தேர்தல் அலுவலர்களும், பத்திரிக்கையாளர்களும் அசால்டாக இருந்தனர்.
அப்போது. தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் பரமத்தி சண்முகம் மற்றும் தனது ஆதரவாளர்கள் சகிதம் கரூர் நகராட்சிக்கு ராகு காலத்தில் வந்து தேர்தல் அலுவரிடம் தனது வேட்பு மனுவை சிரித்த முகத்துடன் தாக்கல் செய்தார் மணிராஜ்.
இதுகுறித்து வழக்கறிஞர் என்.மணிராஜ் கூறியதாவது, நான் கடந்த 1986, 1991, 2001, 2006 ஆகிய வருடத்தில் எல்லாம் ராகு காலத்திலும், எமகண்டம் நேரத்திலும் தான் எனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன். அந்த 4 ஆண்டுளிலும் கவுன்சிலராக வெற்றி பெற்றேன்.
எனக்கு என் மீதும், மக்கள் மீதும் தான் நம்பிக்கை உள்ளது. ஒரு மனிதனுக்கு தேவை தன்னம்பிக்கையே தவிர வேறு எதுவும் தேவையில்லை. நம்பிக்கை தான் மனிதனுக்கு தற்போது தேவை, என்றார்.
நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்து பலர் தாக்கல் செய்யும் வேட்பு மனு எல்லாம் தள்ளுபடி ஆகும் போது, இவர் ராகு காலத்தில் வேட்பு தாக்கல் செய்துள்ள போதிலும், அந்த மனு சட்டப்படி தகுதி பெற்றுள்ளது. வித்தியாசமான மனிதர் மணிராஜ்.


Click it and Unblock the Notifications
