அத்வானியின் ரத யாத்திரை நாளை துவக்கம்-நிதிஷ் குமார் தொடங்கி வைக்கிறார்

இந்த யாத்திரை மூலம் தன்னை 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்திக் கொள்ள அத்வானி முயல்வதாகக் கருதப்படுகிறது. ஆனால், இதை ஆர்எஸ்எஸ் எதிர்த்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் நாக்பூர் சென்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்த அத்வானி, நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று அறிவித்தார்.
அதே நேரத்தில் பாஜக சார்பில் அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்த முயன்று வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானியின் ரத யாத்திரைக்குப் போட்டியாக குஜராத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இந் நிலையில் முதலில் அத்வானியின் யாத்திரையை குஜராத்தின் கரம்சாட் நகரில் மோடி துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அதை அத்வானி தவிர்த்துவிட்டார். இந்த யாத்திரையை மோடி எதிர்ப்பாளரும் பிகார் முதல்வருமான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் துவக்கி வைக்கவுள்ளார்.
பிகாரிவ் ஜெய் பிரகாஷ் நாராயண் பிறந்த இடமான சாப்ராவில் நாளை நிதிஷ் குமார் கொடி அசைத்து வைத்து இந்த ரத யாத்திரையை துவக்கி வைக்கிறார்.
நவம்பர் 20ம் தேதி டெல்லியில் இந்த ரத யாத்திரை நிறைவு பெறும்.
இந்த ரத யாத்திரையையொட்டி இன்று டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அத்வானி,
நாங்கள் எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கடமையை சரிவர செய்திருக்கிறோம். ஆனால் ஆளும் கட்சி நாட்டை அதிருப்தி அடையச் செய்துள்ளது. விலைவாசி உயர்வு, ஊழல், கருப்பு பணம், ஆகிய பிரச்சனைகளில் மக்கள் இந்த அரசு மீது அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
ஊழலை எதிர்த்தும், நல்ல நிர்வாகம், சிறப்பான வளர்ச்சி ஆகியவற்றை வலியுறுத்தியும் நான் நாடு முழுவதும் யாத்திரை நடத்த இருக்கிறேன். இந்த யாத்திரை மறைந்த தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாளான நாளை இந்த யாத்திரை துவங்கும்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கும் நேரத்தில் எனது யாத்திரை நிறைவடையும்.
நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கு காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்ததை அம்பலப்படுத்திய பாஜக மீதே வழக்குப் போட்டு இருக்கிறார்கள். மத்திய அரசால் தூய்மையான நிர்வாகத்தை அளிக்க முடியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications