கலாநிதி, தயாநிதி மாறன் வீட்டில் 10 மணி நேரம் நடந்த விறுவிறு சோதனை- சிக்கியது என்ன?

ர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ நேற்று எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்தது.
இந்த முதல் தகவல் அறிக்கையில், மாறன் சகோதரர்கள் தவிர மேக்சிஸ் அதிபரான ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் குழுமத்தைச் சேர்ந்த 'அஸ்ட்ரோ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் ரால்ஃப் மார்ஷல் ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 120 பி பிரிவு 13(2), 13 (1) (டி) மற்றும் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7 ,12ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதே பிரிவுகளின் கீழ் சன் டி.வி., மாக்சிஸ் கம்யூனிகேசன்ஸ், அஸ்ட்ரோ நெட்வொர்க் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து இன்று மாறன் சகோதரர்களின் சென்னை போட் க்ளப் வீடு, சென்னை அலுவலகம், ஹைதராபாத்-டெல்லி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அதே போல சன் டிவி அலுவலகத்திலும் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது தவிர மாறன் சகோதரர்களுக்கு மிக நெருக்கமான சிலரின் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.
காலை ஏழரை மணியளவில் இந்த சோதனை தொடங்கியது. இந்த சோதனையின்போது பிஎஸ்என்எல் அதிகாரியையும் துணைக்கு அழைத்தனர் சிபிஐ அதிகாரிகள். அவர் மூலம் தயாநிதி மாறன் வீட்டில் நிறுவப்பட்டிருந்த தொலைத் தொடர்பு கோபுரத்தை சோதனையிட்டனர். மேலும் அந்த கோபுரத்தையும், அதனுடன் இணைந்திருந்த வசதிகளையும் அவர்கள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.
இடைவிடாமல் நடந்த இந்த சோதனை மாலை ஐந்தரை மணிக்கு மேல் முடிவடைந்தது. கிட்டத்தட்ட 10 மணி நேரம் நடந்த சோதனையின்போது வழக்குக்கு உபயோகரமான முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது தெரியவில்லை. சோதனையை முடித்து விட்டு வெளியே வந்த அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் என்ன கிடைத்தது என்று கேட்டபோது இப்போது எதுவும் சொல்ல முடியாது என்று கூறிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications