வக்கீலைத் தாக்கிய போலீஸைக் கைது செய்யக் கோரி கோவையில் வக்கீல்கள் பெரும் போராட்டம்
கோவை: கோவை அருகே வக்கீல் ஆனந்தீஸ்வரன் என்பவர் மீது போலீஸார் நடத்திய கொலை வெறித்தாக்குதலைக் கண்டித்தும், அதில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் 2வது நாளாக இன்றும் வக்கீல்கள் போராட்டத்தி்ல ஈடுபட்டுள்ளனர். இதனால் கோவையில் பரபரப்பு நிலவுகிறது.
துடியலூர் காவல் நிலையத்திற்கு வந்த வக்கீல் ஆனந்தீஸ்வரன் என்பவரை அங்கிருந்த காவலர்கள் மிருகத்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த ஆனந்தீஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் பரவியதும் வக்கீல்கள் துடியலூர் காவல் நிலையத்தில் திரண்டனர். கோர்ட்களையும் அவர்கள் புறக்கணித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட போலீஸார் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று கோரி அவர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோவை புறநகர் எஸ்.பி. உமா, தாக்குதலில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி உள்ளிட்ட 5 போலீஸாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யபப்பட்டது.
இருப்பினும் அவர்கள் யாரும் கைது செயப்படவில்லை. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டால்தான் போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என அறிவதி்தனர் வக்கீல்கள்.
மேலும் வக்கீல்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் போராட்டத்தை தொடருவது என தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து வக்கீல்கள் ஊர்வலமாக எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு உள்ளே நுழைய ஆரம்பித்தனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.இதனால் அங்கு மோதல் மூளும் சூழல் எழுந்தது.
பின்னர் வக்கீல்கள் எஸ்.பி. அலுவலகம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன், தேர்தல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த கிருஷ்ணகிரி எஸ்.ரபி. கண்ணன், நீலகிரி எஸ்.பி. நிஜாமுதீன், கோவை கமிஷனர் செந்தில்குமார், புறநகர் எஸ்.பி. உமா ஆகியோர் பேசிப் பார்த்தனர். மேலும் டிஐஜியும் வந்து பேசிப் பார்த்தார். மாவட்ட ஆட்சித் தலைவரும் வந்து பேசிப் பார்த்தார். எதற்கும வக்கீல்கள் மசியவில்லை.
நேற்று இரவு முழுவதும் வக்கீல்கள் எஸ்.பி. அலுவலகத்தை விட்டு வெளியேறவில்லை. அங்கு படுத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. சாலை மறியலிலும் அவர்கள் குதித்தனர். இதனால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வக்கீல்களின் தொடர் போராட்டம் காரணமாக கோவையில் பதட்டம் நிலவுகிறது. எஸ்.பி. அலுவலகத்தைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications