உயர்நீதிமன்ற உத்தரவால் கைதிலிருந்து தற்காலிகமாக தப்பினார் புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம்
புதுச்சேரி: பத்தாம் வகுப்புத் தேர்வை எழுத ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவரை அனுப்பிய சர்ச்சையில் சிக்கியுள்ள புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரத்தை புதன்கிழமை வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அவர் உடனடி கைது நடவடிக்கையிலிருந்து தப்பியுள்ளார்.
புதுச்சேரியில் ரங்கசாமி எப்போது தேர்தலில் பெரும் வெற்றி பெற்றாரோ அப்போதிருந்தே அவருக்கு தலைவலியும், இன்ன பிற குடைச்சல்களும் அதிகமாகி விட்டது. தொடர்நது பல்வேறு சர்ச்சைகளை அவர் சந்தித்து வருகிறார். எந்த சர்ச்சைக்கும் அவர் விளக்கம் அளிப்பதில்லை என்பதுதான் இதில் விசேஷமானது.
இந்த வகையில் தற்போது அவரது அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சராக உள்ள கல்யாணசுந்தரம் ஒரு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார். பத்தாவது வகுப்பை கூட முடிக்காத இவர் அறிவியல் மற்றும் சமூ்க அறிவியலில் பெயிலாகி விட்டார். இதை முடிக்காமல் பல ஆண்டுகளாக திணறி வந்த கல்யாண சுந்தரம், இப்போது கல்வி அமைச்சராகி விட்டதால் மற்றவர்களின் கேலியிலிருந்து தப்ப பத்தாம் வகுப்புத் தேர்வை தனித் தேர்வராக எழுத விண்ணப்பித்தார்.
ஆனால் சமூக அறிவியல் தேர்வை இவருக்குப் பதில் இன்னொருவர் எழுதியிருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சமூக அறிவியல் தேர்வை இவர் எழுதவே இல்லை.
பரீட்சையை திண்டிவனத்தில் வைத்து எழுதியதால் இவர் மீது திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் கைது செய்யவும் தேடி வந்தனர். ஆனால் சிக்காமல் தப்பி தலைமறைவாகி விட்டார் கல்யாண சுந்தரம். அவரை விசாரணைக்கு வருமாறு விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அதை அவர் வாங்கவில்லை.
இந்த நிலையில், கல்யாணசந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் புதுவை-தமிழக அரசுகள் இடையே உள்ள அரசியல் காரனங்களால் தன் மீது வேண்டும் என்றே புகார் செய்துள்ளனர் என்று கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிபதி கர்ணன், மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து புதன்கிழமை அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும். மறு உத்தரவு வரும்வரை அமைச்சரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து தற்காலிகமாக கைது நடவடிக்கையிலிருந்து தப்பியுள்ளார் கல்யாண சுந்தரம்.












Click it and Unblock the Notifications