இணையத்தளம் பயன்படுத்தும் இளைஞர்களை கவர்ந்துள்ள மதிமுக: வைகோ
தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தல் மதிமுகவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தரும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை. இருப்பினும் மக்கள் கடமைகளை தொடர்ந்து செய்து வருகிறோம். மதிமுகவின் நடவடிக்கைகள் இளைஞர்களை, குறிப்பாக இணையத்தளம் பயன்படுத்தும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக பெரிய வெற்றியைப் பெற அவர்கள் விரும்புகின்றனர்.
மதிமுக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசியல் சார்பற்ற நிர்வாக ஆலோசனைக் குழு ஒன்றை அமைப்போம். அரசியல் சார்புடைய யாரும் அதில் இடம் பெறமாட்டார்கள். இந்தக் குழு மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனைகள் வழங்கும். அதன்பேரில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
உள்ளாட்சித் தேர்தலில் எதிர்பாராத வெற்றியை மதிமுக பெறும். மக்கள் பிரச்னைகளுக்காக மதிமுக தொடர்ந்து போராடி வருவது மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்கம் மதிமுகவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைத் தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இருக்கிறது. முந்தைய அரசு செய்த அதே தவறை இப்போதைய அரசும் செய்யாது என நம்புகிறோம்.
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன்பேரில் மரண தண்டனையை நிறுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வைகோ.
இதற்கிடையே திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவாக 5 பேர் தீக்குளித்து தற்கொலை செய்தனர்.
அவர்களது நினைவாக ஆண்டுதோறும் மதிமுக சார்பில் சூளுரை நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, அந்த 5 தொண்டர்களின் புகைப்படங்களுக்கு நேற்று வைகோ அஞ்சலி செலுத்தி, சூளுரை நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications