கருணாநிதியின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை: பரிதி இளம்வழுதி

பரிதியின் சென்னை எழும்பூர் பகுதி 103-வது வட்ட செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேர் உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி புகார் கூறியதன் பேரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட 2 நாளிலேயே அவர்கள் 3 பேரும் திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியதையடுத்து, பரிதி இளம்வழுதிக்கு தெரியாமலேயே மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
இதனால் தனது துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த 8ம் தேதி பரிதி இளம்வழுதி திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் அனுப்பினார். நேற்று முன்தினம் அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நிருபர்களிடம் பேசிய பரிதி இளம்வழுதி, சட்டசபைத் தேர்தலின் போது, கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து புகார் அளித்தேன். அதன்படி, அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், எவ்வித விளக்கமும் பெறாமல் அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகார் கொடுத்த என்னிடமும், விளக்கம் பெறவில்லை.
கட்சி தலைமைக்கு நான் தான் ராஜினாமா கடிதம் கொடுத்தேன். அதனை ஏற்றுக் கொண்டு புதிய நிர்வாகிகளாக வி.பி.துரைசாமி, கிருஷ்ணசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
நான் திமுகவில் இன்னும் வடசென்னை மாவட்டத்தின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். என் பணி தொடரும். கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று நான் கூறியதில் உறுதியாக இருக்கிறேன்.
கட்சிக்குத் துரோகம் இழைத்தவர்கள், கட்சி வேட்பாளர்களின் தோல்விக்கு பாடுபட்டவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கூறினேன். அவரும் உண்மையை புரிந்து கொண்டு நீக்க உத்தரவிட்டார். ஆனால் அவர்களை கட்சியில் சேர்க்கும் போது என்னிடம் எந்த தகவலும் கூறவில்லை.
அவர்களை சேர்க்கும்போது என்னிடம் கேட்டிருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து. நான் இதுகுறித்து திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து கூறலாம் என்று 4 முறை முயற்சித்தேன். ஆனால் அவர் என்னை சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டார். அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.
நான் ராஜினாமா கடிதம் கொடுத்தபோதும் என்னை அழைத்து விசாரணை செய்வார்கள் என்று நினைத்தேன். என்னையும் விசாரிக்கவில்லை. இங்கு இருக்கும் நிலை தான் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது என்கிற வருத்தத்தில் தான் ராஜினாமா செய்தேன்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, என் பிரச்சனை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை செய்வேன். இதுபோன்ற மனக்குமுறலோடு இருப்பவர்களுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன்.
இப்போதும் எனக்கு தலைவர் கருணாநிதி தான். கட்சியில் ஜனநாயக ரீதியாக யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அதனை ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
இப்போதும் கட்சிக்கு புதிய நிர்வாகிகளாக இருவர் நியமிக்கப்பட்டிருப்பதையும் என் ராஜினாமா கடிதத்தை ஏற்கும் முடிவையும், தலைவர் கருணாநிதி மனப்பூர்வமாக செய்திருக்க மாட்டார். அவரைத் தாண்டி உள்ள அதிகார மையம் தான், இதைச் செய்துள்ளது. கருணாநிதியின் முழுக் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை.
அதிமுக அரசு என் மீது தொடரும் வழக்குகளுக்குப் பயந்து தான் நான் இப்படி செயல்படுவதாக கூறுவது சிரிப்பாக இருக்கிறது. என்னைப் பற்றி அனைவருக்குமே தெரியும். நான் பல அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கிறேன். கடந்த 1991 மற்றும் 2001ம் ஆண்டுகளில், அதிமுக அரசுக்கு எதிராக தனியொரு நபராகச் செயல்பட்டவன். வழக்குகளுக்கெல்லாம் நான் பயப்படுவதில்லை.
கட்சி தலைவர் கருணாநிதியையோ, பொருளாளர் ஸ்டாலினையோ வாய்ப்பு வரும்போது சந்திப்பேன். என் போன்றவர்களையும், அடக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களையும் கைதூக்கி விடவே திமுக துவங்கப்பட்டது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக என் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டனர் என்று சொல்ல முடியாது என்றார் பரிதி.












Click it and Unblock the Notifications