2 ஜி ஏலத்தை எதிர்த்தவர் ஜோஷி! - காங் குற்றச்சாட்டு
டெல்லி: பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக அலைக்கற்றை ஏலத்தை பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி எதிர்த்ததாகவும், இப்போது ஏலம் விடாதது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி இரட்டை நிலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக முரளி மனோகர் ஜோஷி 2007-ல் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முரளி மனோகர் ஜோஷி 2007 டிசம்பர் 2-ம் தேதி எழுதிய கடிதத்தை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி புது தில்லியில் புதன்கிழமை வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இப்போது 2-ஜி விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் பொதுக் கணக்குக் குழுவுக்கு தலைமை வகித்துவரும் முரளி மனோகர் ஜோஷி 2007-ல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், அலைக்கற்றையை ஏலம் விட்டிருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி இப்போது கூறிவருகிறது விசித்திரமாக இருக்கிறது," என்றார்.
கடிதம் எழுதியபோது வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஜோஷி தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி என்னதான் எழுதியிருந்தார் ஜோஷி?
"தொலைத் தொடர்புத் துறையில் கோலோச்சி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு எதிராக செயல்பட்டுவருகின்றன.
புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் வளர்ச்சி அடையக் கூடாது என்ற நோக்கில் தனியார் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அலைக் கற்றையை ஏலம் விட வேண்டும் எனவும் சில தனியார் நிறுவனங்கள் ஆலோசனை தெரிவித்துள்ளன. இதன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு எதிராக தனியார் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வழி ஏற்படும். அலைக்கற்றை விஷயத்தில் பொதுத் துறை நிறுவனங்களையும், நேர்மையான நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் நீங்கள் (பிரதமர்) நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுக்கு வருவாய் வரும் வகையிலும், அலைக்கற்றையைப் பெற விரும்பும் நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பு தரும் வகையிலும் தொலைத் தொடர்புக் கொள்கையை வகுத்தால் பொதுத் துறை நிறுவனங்களைக் காக்க முடியும்," என்று தனது கடிதத்தில் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்தக் கடித விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக, "2-ஜி அலைக்கற்றையை இப்போதைய சந்தை விலையில் மத்திய அரசு அளிக்கவில்லை என்பதும், எதிர்காலத்தில் நிதியமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் அலைக்கற்றையை ஏலம் விடக் கூடாது என்பதும்தான் பா.ஜ.க. கூட்டணி அரசின் முடிவு. இதை காங்கிரஸ் அரசு மீறிவிட்டது. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற அரசுத் துறை நிறுவனங்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதில் என்ன தவறு?", என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications