தலித் என்பதால் அவமானப்படுத்துகின்றனர்- சக நீதிபதிகள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடும் புகார்

Subscribe to Oneindia Tamil

Justice Karnan
சென்னை: நான் தலித் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி என்பதால் மற்ற நீதிபதிகள் ஜாதிரீதியில் பாகுபாடு காட்டுவதாகவும், தன்னை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடுமையான புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷனில், நீதிபதி கர்ணன் புகார் தந்துள்ளார். ஜனாதிபதிக்கும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் புகார் மனுவின் நகல்களை அவர் அனுப்பியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் நீதிபதி கர்ணன் கூறுகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரு சிலர், நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் வேண்டுமென்றே அவமானப்படுத்துகின்றனர். இதுகுறித்து தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷனில் புகார் அளித்துள்ளேன்.

எனது புகார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும், விசாரணை நடத்த அவர் அனுமதித்திருப்பதாகவும், ஊடக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் விசாரணை துவங்கப்படவில்லை. விசாரணை துவங்கினால் எனது புகாரை நிரூபிப்பேன்.

எனக்கு 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தே இந்த அவமரியாதைகள் நடந்து கொண்டுள்ளன. ஆனால், நீதிமன்ற மாண்பை காப்பதற்காக இதுவரை பொறுத்துக் கொண்டிருந்தேன். இதனால் தான் இதுவரை இது குறித்து வெளியே சொல்லாமல் இருந்தேன்.

நான் சுயமரியாதை உள்ளவன். அதனால் தான் என்னை குறி வைக்கின்றனர். எனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஏன் புகார் சொல்லவில்லை என்று கேட்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை.

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கான தேசிய கமிஷன், ஒரு கண்காணிப்பு அமைப்பு. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால், அதை கண்காணிக்கும் பொறுப்பு இந்த கமிஷனுக்கு உள்ளது. ஜனாதிபதியின் கீழ் இந்த கமிஷன் இயங்குகிறது. இதனால் தான் நேரடியாக அங்கேயே புகாரை சொன்னேன்.

என்னை அவமானப்படுத்திய நீதிபதிகள் யார் என்பதை விசாரணையின் போது கூறுவேன். தேநீர் விருந்து, மதிய உணவு, டின்னர், நீதிபதிகள் குழு என நீதிபதிகள் ஒன்றாக கூடும் இடங்களில் எல்லாமே நான் அவமானபடுத்தப்பட்டேன். நீதிமன்ற விழாக்களில் நான் பங்கு பெற வாய்ப்பு கூட அளிப்பதில்லை.

ஒரு திருமண நிகழ்ச்சியில் என்னை ஷூ அணிந்திருந்த ஒரு நீதிபதி வேண்டுமென்றே காலால் மிதித்துவிட்டு, பின்னர் ஸாரி என்றார். குடியரசு நாள் கொண்டாட்டத்தின்போது மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் என் பெயர் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை கிழித்து கீழே எறிந்து காலால் போட்டு மிதித்தார் இன்னொரு நீதிபதி.

இந்த சம்பவங்களை இரண்டு சக நீதிபதிகள் நேரில் பார்த்தனர். எனக்கு நேர்ந்த தொல்லைகள் பற்றி, மற்ற நீதிபதிகளிடம் நான் தெரிவிக்கவில்லை. இது ஒரு கருப்பான அத்தியாயம்.

நீதிபதிகள் சிலருக்கு குறுகிய மனப்பான்மையும், ஜாதிரீதியில் ஆதிக்க மனப்பான்மையும் உள்ளது. அதை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகளிடம் காட்டுகின்றனர்.

நீதிபதிகள் அனைவரும் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். ஜாதிரீதியிலான பாகுபாடு மன வேதனை தருகிறது என்றார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மற்ற நீதிபதிகள் அவமரியாதை செய்யப்படுகின்றனரா? என்று கேட்டதற்கு, நான் சுயமரியாதை இருப்பதால் தான் கஷ்டங்களை எதிர்கொள்கிறேன். தலித் சமூகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் சிலர், சுயமரியாதையை கடைபிடிக்க தவறுகின்றனர். ஆனால், நான் சுயமரியாதையை கடைபிடிப்பதால் தான், கஷ்டங்களை எதிர்கொள்கிறேன்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதிகள் கனகராஜ், அசோக்குமார், பி.டி.தினகரன், வெங்கடாசலம், ஜெயபால் ஆகியோர் சுயமரியாதை உள்ளவர்கள். என்னைப் போலவே அவர்களும் பிரச்சனைகளை அனுபவித்தனர் என்றார்.

உயர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல தலித், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மீது கூட துன்புறுத்தல் இருக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் எனது புகார் தொடர்பாக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். எனது புகார் தொடர்பாக எப்போது என்னிடம் கேட்டாலும் உரிய ஆதாரங்களை அளிப்பேன். அவமானப்படுத்தியவர்களின் பெயர்களையும் வெளியிடுவேன்.

அதுவரை இந்த விவகாரத்தில் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றார்.

நீதிபதி கர்ணனின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்க நிருபர்கள் முயன்றனர். ஆனால், அது முடியாமல் போய்விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+