ஆம்னி பஸ் விபத்து- சுத்தியலால் பஸ் கண்ணாடியை உடைத்து பலரைக் காப்பாற்றிய என்ஜீனியர்
ஈரோடு: ஈரோடு அருகே சித்தோடில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த ஆம்னி பஸ் விபத்தில் முன் எச்சரிக்கையாக வைக்கப்பட்டு இருந்த சுத்தியலால் பஸ் கண்ணாடியை உடைத்தும், பெட்டியால் உடைத்தும் சக பயணிகளை காப்பாற்றிய உருக்கமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
சுத்தியலால் கண்ணாடி உடைப்பு
ஈரோடு அருகே சொகுசுப் பேருந்து ஒன்று விமான எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி மீது மோதி 7 பேர் உடல் கருகி பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். கோரமான இந்த விபத்து நடைபெற்ற போது பேருந்தில் பயணம் செய்த கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பரத் என்ற கம்ப்iட்டர் என்ஜினீயர் சமயோசிதமாக செயல்பட்டு, அவசர வழி ஜன்னல் கண்ணாடியை உடைத்து சக பயணிகள் வெளியேற உதவி உள்ளார்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளியாக சிகிச்சை பெற்ற பரத் கூறுகையில்,
பெங்களூரில் இருந்து பஸ் ஏறியதும் என்னுடைய இடத்துக்கு வந்தேன். என்னுடன் நண்பர் மகேஸ்வரன் என்பவரும் வந்தார். எங்கள் படுக்கைக்கு அருகில் ஒரு சுத்தியல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து
நாங்கள், பஸ் கிளீனரிடம் கேட்டோம். அப்போது அவர், அது அவசர வழி ஜன்னல் கண்ணாடியை உடைப்பதற்கான சுத்தியல் இது. கண்ணாடியை இந்த சுத்தியலால் உடைத்தால் எளிதில் உடைந்து விடும்' என்று கூறினார்.
விபத்து ஏற்பட்டதும், பதற்றத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற பயணிகளை போல நானும் திகைத்துக்கொண்டு இருந்தேன். அப்போதுதான் சுத்தியலை பார்த்த நினைவு வந்தது. உடனடியாக சுத்தியலை எடுத்து அவசர வழி ஜன்னலை உடைத்தேன். அதன் வழியாக பலர் வெளியேறி தப்பிக்க முடிந்தது என்றார் அவர்.
கலெக்டர் பாராட்டு
சரியான நேரத்தில் சக பயணிகள் உயிர் பிழைக்க உதவிய பரத்துக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பெட்டியால் உடைத்து வெளியேறினர்
இதுபோல் சென்னையை சேர்ந்த ரங்கராஜன் என்ற பயணி பேருந்தின் கண்ணாடியை உடைத்து பயணிகள் வெளியேற உதவியுள்ளார். அவர் கூறுகையில்,
"நான் கடைசி படுக்கையில் படுத்து இருந்தேன். பஸ் மிகவும் வேகமாக சென்று கொண்டு இருந்தது. தூக்கிப்போட்டுக்கொண்டே வந்ததால் என்னால் அமைதியாக தூங்க முடியவில்லை. எனவே அவ்வப்போது விழித்து பார்த்துக்கொண்டு அரைதூக்கத்தில் படுத்துக்கொண்டு இருந்தேன். விபத்து நடந்தபோது ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.
பஸ் நகராமல் அப்படியே நின்றதும் முன்பகுதிக்கு விரைந்து வந்தேன். அப்போது தீ மள மள' வென்று பற்றிக்கொண்டு இருந்தது. உடனடியாக அனைவரையும் எழும்பும்படி குரல் எழுப்பினேன். என்னால் அவசர வழி ஜன்னலை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒரு பெட்டியை எடுத்து கண்ணாடியை உடைத்தேன். அதன் வழியாக ஏறி குதித்து தப்பினேன். அதைத்தொடர்ந்து பலரும் வெளியே வந்தார்கள். 21 பேர் வெளியே வந்ததை நான் பார்த்தேன்.'' என்றார்.
பஸ் எஞ்சினில் ஆயில்
விபத்திற்கு காரணமான டேங்கர் லாரி டிரைவர் வடிவேலு உயிர் தப்பியுள்ளார். அவர் கூறுகையில்,
சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து விமானத்திற்கு பயன்படுத்தும், ஆயிலை கோவை விமான நிலையத்திற்கு ஏற்றிச் சென்றேன். அதிகாலை மூன்றரை மணியளவில், சித்தோடு நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது, டேங்கரின் பின்னால் ஏதோ மோதுவது போன்று டமார்' என்று சத்தம் கேட்டது.
டேங்கரின் பின்பகுதியில் பஸ் மோதியதில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்த ஆயில் ரோட்டில் கொட்டியது. இந்த பஸ்சின் என்ஜின் பகுதியில் ஆயில் பட்டதால் தீப்பற்றிக்கொண்டது. லாரி தீப்பற்றாமல் இருக்க ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி சென்று பேருந்தினை நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தேன். பெருந்துறை காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தேன் என்றார்.
விபத்துகளை தடுக்க நடவடிக்கை
கோரமான விபத்து நடைபெறும் போது மட்டும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்கள் ஆகியோர் அதில் அக்கறை செலுத்துகின்றனர். பின்னர் அதைப்பற்றி மறந்து விடுகின்றனர். விபத்து ஏற்படுவதற்கான காரணம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அதற்கான காரணங்களை கண்டறிந்து அடுத்தமுறை இதுபோன்ற விபத்துகள் நிகழாதவகையில் தடுக்கவேண்டும் என்பதே அனைவரின் வலியுறுத்தலாகும்.












Click it and Unblock the Notifications