சட்டையைத் தடவி, ஷூவைக் கழற்ற வைத்து கலாமிடம் மோசமாக நடந்த யு.எஸ். அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

Abdul Kalam
நியூயார்க்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, சோதனை என்கிற பெயரில் ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி 2வது முறையாக அமெரிக்க அதிகாரிகள் அவமதித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டும் இதேபோல அமெரிக்கர்கள் அவமரியாதை செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.

அப்துல் கலாமை சோதனை என்கிற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் அடுத்தடுத்து 2 முறை அவமதித்திருக்கும் செயல் இந்தியர்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டும் இதேபோலத்தான் கலாமை அவமதித்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தில் வைத்தே கலாமை அவமதித்து இந்தியர்களை அதிர வைத்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள். இந்த சம்பவத்தை அப்போது மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மீடியாவில் செய்திகள் வெளியான பின்னர்தான் உப்புக்குச் சப்பு கண்டனத்தை தெரிவித்தது மத்திய அரசு. நாடாளுமன்றத்திலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க அரசும், சம்பந்தப்பட்ட விமான நிறுவனமும் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் தற்போது நடந்துள்ள 2வது சம்பவத்திற்கு மத்திய அரசு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் கலாம் களம் இறங்கி அணு உலைக்கு ஆதரவாக பேச ஆரம்பித்திருப்பதால் இந்த உடனடி எதிர்ப்பைக் காட்டியுள்ளது மத்திய அரசு என்று தெரிகிறது.

அக்டோபர் 29ம் தேதியன்று இந்த சம்பவம் நியூயார்க் விமான நிலையத்தில் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லி திரும்புவதற்காக ஜான் எப் கென்னடி விமான நிலையத்திற்கு வந்தார் அப்துல் கலாம். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து கலாமின் கோட், சட்டையைத் தடவிப் பார்த்து வெடிகுண்டு இருக்கிறதா, வெடிபொருள் இருக்கிறதா என்று சோதனையிட்டனர். பின்னர் அவரை அனுமதித்தனர்.

அதன் பின்னர் கலாம் ஏர் இந்தியா விமானத்திற்குள் ஏறி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இந்த சமயத்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் புகுந்தனர். கலாமை மீண்டும் சோதனையிட முயன்றனர். இதற்கு ஏர் இந்தியா விமானிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, மிக மிக முக்கியப் பிரமுகர், பாதுகாப்பு சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்று வாதிட்டனர்.

ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத அமெரிக்க அதிகாரிகள் கலாமிடம் ஷூவைக் கழற்றுமாறும், கோட்டைக் கழற்றுமாறும் கூறியுள்ளனர். இப்போதும் கலாம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சொன்னதைச் செய்தார். ஏர் இந்தியா விமானிகளுக்கும், விமானத்தில் இருந்தவர்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளின் செயல் பெரும் கொதிப்பைக் கொடுத்தது.

ஷூவை பெற்ற அமெரிக்க அதிகாரிகள் அதை முழுமையாக பரிசோதித்தனர். கோட்டையும் பரிசோதித்தனர். பின்னர் அதை கலாமிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.

இந்தியா திரும்பியதும் கலாமின் அலுவலகம் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவித்தது. இதையடுத்தே மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இது ஏற்றுக் கொள்ள முடியாதது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சோதனைகளுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி 2வது முறையாக அவர் அவமதிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அளவில் தொடர்பு கொண்டு இந்தியாவின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோல மீண்டும் நடந்தால் இந்தியாவும் இதேபோன்ற செயலில் ஈடுபடும் என்று எச்சரிக்குமாறும் நிரூபமா அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மன்னிப்பு

கலாமை அவமதித்ததற்காக அமெரிக்க அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் அது உறுதியளித்துள்ளது.

இதுதொடர்பாக கலாமுக்கு அது கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+