இந்தப் பக்கம் வேலுமணி.. அந்தப் பக்கம் சிவி சண்முகம்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் அடி! அலறும் அதிமுக!
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் சிவி சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கையில் எடுத்துள்ள திட்டங்கள், கட்சிக்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்திள்ளன. இதற்கிடையில், வேலுமணி தனது ஆதரவாளர்களுடன் வேறு ஒரு ப்ளானை வைத்துள்ளாராம். இதனால், அதிர்ச்சியில் இருக்கிறாராம் எடப்பாடி.
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பிளவும், இணைவும், மாவட்டச் செயலாளர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களைச் சுற்றியேதொடர்ந்து சலசலப்பு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாக மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடியின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்தப் பொறுப்பை அவர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

அதிமுக உட்கட்சி மோதல்
இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினர். இதற்கிடையே, கடந்த மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், எஸ்.பி. வேலுமணி தனது ஆதரவாளர்களிடம் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோவில், "என்னை நம்பி பலர் வந்திருக்கும்போது, அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல் எனக்கு மட்டும் உயர்பதவி கொடுத்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்வது?
எஸ்.பி. வேலுமணி
மாவட்ட அளவில் பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர்களை புறக்கணித்து நான் மட்டும் பதவி வாங்க விரும்பவில்லை" என்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை ஏற்க இயலாது என்று தெரிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினர். "பதவிகள் தேவையில்லை; சாதாரண தொண்டர்களாகவே தொடர்கிறோம்" என்ற கருத்து அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளது.
சிவி சண்முகம்
இந்த தொடர் சம்பவங்கள் அதிமுகவின் உட்கட்சி அரசியலில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தலைவர்களும், சிவி சண்முகம் தலைமையில் சில வட மாவட்ட நிர்வாகிகளும் ஒரே அணியாக செயல்படுகிறார்களா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. சமீப காலமாக மாவட்டச் செயலாளர் நியமனங்கள் தொடர்பாகவும் அதிருப்தி நிலவி வருகிறது. குறிப்பாக, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவி தொடர்பான முடிவு சில நிர்வாகிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதிகாரப் போட்டி
இதுவே தற்போது வெளிப்படையான அதிருப்தியாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, "அதிமுக 2.0", "புதிய தலைமை", "அதிகாரப் போட்டி" போன்ற விவாதங்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திட்டமிட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற தகவல் மட்டும் உண்மை என்கின்றனர் அதிமுகவினர்.
எடப்பாடி பழனிசாமி
தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமி இந்த அதிருப்தியை எப்படி கையாளப் போகிறார், மூத்த நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படுமா, அல்லது கட்சியி மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமா? என்பதுபோன்ற கேள்வி அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கு முன்பாக கட்சிக்குள் உருவாகியுள்ள இந்த சலசலப்பு அடங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications