கரூர் தவெக கூட்ட நெரிசல்.. 41 குடும்பத்தினருக்கு அரசு வேலை.. ஆர்டர் வழங்கும் முதல்வர் விஜய்
சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகின்றன ஜூலை 10 , 11 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கு நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்கிறார். மேலும், கடந்த ஆண்டு செப்டம்பரில கரூரில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதுடன், 41 பேர் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் அரசு வேலைக்கான ஆணையை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. விஜய் தேர்தலுக்கு முன்பு பிரச்சாரத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வந்தார். அந்த வகையில் கரூருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி சென்றார். அங்குள்ள வேலுசாமியபுரத்தில் பிரசாரம் செய்தபோது அதிகளவு கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது இன்று முதல்வராக உள்ள விஜய் நேரில் சென்று ஆறுதுல் தெரிவிக்கவில்லை.. அதேநேரம் அன்றைய தினம் தி.மு.க. தலைவரும், அன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு உடனே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதனிடையே விஜய் கரூர் செல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அதேபோல் பாதிக்கப்பட்டவர்களை நேரில் போய் பார்க்காமல், அவர்களை மகாபலிபுரத்திற்கு அழைத்து வந்து ஆறுதுல் கூறினார். அத்துடன்இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவிகளை செய்ய முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளை முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
வருகிற 10-ந் தேதி கரூருக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார். அப்போது 41 பேரின் வீட்டுக்கும் நேரடியாக சென்று அந்த குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி நேற்று மாலை முதலே செய்திகள்வெளியாகி வரும் நிலையில், அரசு தரப்பில் இருந்தோ, தவெக தரப்பில் இருந்தோ, இதுவரை எந்த மறுப்பும் வெளியாகவில்லை.
அரசு வேலை தருவதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அரசு அதிகாரிகள் தொடர்பு கொண்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்று பணி ஆணை கொடுப்பதற்காக அவர்களது விவரங்களை எழுதி அனுப்புமாறு கூறியுள்ளார்களாம். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த பழனியம்மாள், கோகிலா ஆகியோரின் தந்தை பெருமாள், உயிரிழந்த தரணிகாவின் தந்தை சக்திவேல் உள்ளிட்டோர் கரூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று தங்களது விவரங்களை எழுதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இணைக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே 10ம் தேதி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை கிடைக்கப்போவது உறுதி என்கிறார்கள்.














Click it and Unblock the Notifications