மனநலம் பாதிக்கப்பட்ட மகளைக் கொன்ற தந்தைக்கு ஜாமீன்: சென்னை செஷன்ஸ் கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு விஷயம் கொடுத்து கொலை செய்த தந்தைக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். வெல்டர். அவரது மகள் ஜனனி. மனநலம் பாதிக்கப்பட்டவர். தனது மகள் படும் கஷ்டத்தைப் பார்த்த கன்னியப்பன் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் போலீசில் சரணடைந்தார். அவர் மீது திருவல்லிக்கேணி போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் கன்னியப்பன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி பி. தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு,

மனுதாரர் கன்னியப்பனின் மனைவி தெய்வநாயகி. இவர்களுக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் பிறந்ததும் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு ஜனனி மகளாக பிறந்ததில் இருந்து அந்த குடும்பத்து சந்தோஷம் சிதறடிக்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் ஜனனியால் பேச, கேட்க, நடக்க முடியாது. அதோடு அவள் மனநலனும் பாதிக்கப்பட்டவள்.

கன்னியப்பன் காட்டும் அன்பை அவளால் புரிந்துகொள்ளவும் முடியாது. அந்த அன்புக்கு பதில் செய்யவும் அவளால் முடியாது. எனவே அவர் மிகுந்த வேதனை அடைந்தார். தாங்க முடியாத துன்பத்தால் ஒரு முடிவு எடுத்தார்.

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள டிரைசீ ரெசிடென்சி என்ற ஓட்டலில் அவர் 12.10.11 அன்று தனது குடும்பத்தாருடன் அறை எடுத்து தங்கினார். நீண்ட நேரம் அறை திறக்கப்படாததால் சந்தேகப்பட்டு அதை திறந்து பார்த்தபோது கன்னியப்பன், மனைவி மற்றும் பிள்ளைகள் 4 பேரும் விஷம் அருந்தி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

ஜனனி இறந்துபோனாள். மற்ற 3 பேரும் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மகளை கொலை செய்தது, தற்கொலைக்கு முயற்சி செய்தது ஆகிய குற்றங்களின் கீழ் கன்னியப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அது கிடைக்கவில்லை. எனவே கடந்த 6ம் தேதி சரணடைந்து சிறைக்குப் போய்விட்டார். இப்போது ஜாமீன் கேட்கிறார். இந்த பரிதாபமான சம்பவம் பற்றி பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும்.

மகளை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இருந்தது. அதில் சந்தேகம் இல்லை. கன்னியப்பன் செய்த கொலை, கருணைக் கொலையாகும். சில மேலை நாடுகளில் கருணைக் கொலை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை, உயிரைக் காப்பாற்ற வேண்டிய டாக்டரே, தனது தொழில் தர்மத்தை மீறி நிறைவேற்றுவார். நமது நாட்டில் கருணைக்கொலையை அனுமதிக்கவில்லை.

மற்ற கொலைகளுக்கும், இதற்கும் வித்தியாசம் உண்டு. அன்பு மகளையே கொலை செய்துவிட்டு, இப்போது அவர் உயிரற்ற மனிதனாகத்தான் உலவுகிறார். இந்த வழக்கு எனக்கு, நல்லதங்காளின் பரிதாபமான சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.

இந்த சம்பவம் பொதுவாக நடக்காத ஒன்று. சட்டத்தை வைத்து முடிவு செய்வதா? பரிதாபத்தை வைத்து முடிவு செய்வதா? என்ற போராட்டம் இந்த வழக்கில் உள்ளது. எது எப்படி என்றாலும், சட்டம்தான் முதன்மையானது. சட்டத்தின்படிதான் நீதிமன்றம் செயல்பட்டாக வேண்டும்.

ஆனால் நீதிமன்றம் என்பது, வெறும் கல், மண்ணால் மட்டுமே கட்டப்பட்ட கட்டிடம் அல்ல. இதற்கும் மனசாட்சி உள்ளது. மனிதர்களின் உணர்வுகளையும், நாடித்துடிப்பையும் நீதிமன்றம் உணர முடியும். இல்லாவிட்டால், அது வழங்கும் தீர்ப்புகளில் முழுமையான நீதிபரிபாலனை இருக்க முடியாது.

மேலும், ஜாமீன் வழங்குவது எனது தனி அதிகாரத்துக்கு உட்பட்ட விஷயம். அதுவும் சட்டம் தந்த அதிகாரத்தைத் தாண்டக்கூடாது.

இந்த வழக்கைப் பொருத்தவரை, கன்னியப்பன் வெளியே சென்று சாட்சிகளை கலைக்க முயலமாட்டார். அவருக்கு நிரந்தர வீடு உள்ளது. எனவே பல்வேறு கோணங்களில் பரிசீலித்து கன்னியப்பனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க முடிவு செய்கிறேன். திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+