வெளியே விட்டால் மீண்டும் அறைவேன் - பவாரை அடித்த ஹர்வீந்தர் சிங்
டெல்லி: வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒருமுறை சரத்பவாரை அறைவேன் என்று மத்திய அமைச்சரை அறைந்த சீக்கிய இளைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரை அறைந்த இளைஞரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், வியாழக்கிழமை நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும் போது பத்திரிகையாளர்களுக்கு இடையே அமர்ந்திருந்த ஒரு சீக்கிய இளைஞர், திடீரென எழுந்து வந்து அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அத்துடன், "ஊழல்வாதிகளுக்கு இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கத்தியபடியே தன் பையில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டினார்.
அடிவாங்கியதில் அதிர்ச்சியடைந்த சரத்பவார் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். இதன் பின், அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இளைஞரை பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மீண்டும் அடிப்பேன்
ஹர்வீந்தர் சிங்கை கைது செய்த போலீசார் டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது பேசிய ஹர்வீந்தர் சிங் மற்றொரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பவாரை அறைவேன் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து டிசம்பர் 9-ம் தேதி வரை 14 நாட்கள் ஹர்வீந்தர் சிங்கை காவலில் வைக்குமாறு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் ஜஸ்ஜீத் கெளர் உத்தரவிட்டார்.
ஹர்விந்தர் சிங்கை நீதிமன்றத்தில் இருந்து வெளியே அழைத்துவரும்போது தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், அவரைத் தாக்க முயன்றனர். மேலும் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications