26/11 தாக்குதல் 3வது ஆண்டு நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி
மும்பை: 26/11 தாககுதல்களில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் கே. சங்கரநாராயணன், முதல்வர் பிரித்விராஜ் சவான் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையின் பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர், ஏராளமானோர் காயம் அடைந்தனர். அந்த கொடூரத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த தாக்குதல்களின்போது தீவிரவாதிகளுடன் போராடி 18 போலீசார் உயிர் இழந்தனர். அவர்கள் நினைவாக தென் மும்பையின் மரைன் டிரைவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடம் பொது மக்கள் அஞசலிக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் கே. சங்கரநாராயணன், முதல்வர் பிரித்விராஜ் சவான், உள்துறை அமைச்சர் ஆர். ஆர். பாட்டீல், பொதுப்பணித்துறை அமைச்சர் சகன் பஜ்பல், உள்துறை அமைச்சர் சடேஜ் பாட்டீல், எம்.பி. நிதேஷ் ரானே, உள்துறை அமைச்சக்ததின் கூடுதல் தலைமை செயலாளர் உமேஷ் சாரங்கி, டிஜிபி கே. சுப்பிரமணியன், ஏடிஎஸ் தலைவர் ராகேஷ் மி்ஸ்ரா, மும்பை போலீஸ் கமிஷனர் அருப் பட்னாயக், மறைந்த தியாகிகளின் குடும்பத்தார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
26/11 தாககுதலில் இறந்த மகனை நினைத்து பெருமைப்படும் தந்தை
மும்பை தாக்குதல்களில் பலியான ராணுவ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தை கே. உன்னிகிருஷ்ணன் தனது மகன் பெயரில் ஆதரவற்றோர் இல்லம் துவங்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே அவர் பள்ளிகளுக்கு சீருடைகளும், மதிய உணவும் வழங்கி வருகிறார்.
மும்பை தாஜ் மஹால் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் தனது உயிரைத் தியாகம் செய்தார். பூனேவில் உள்ள நேஷனல் பாதுகாப்பு அகாடெமியில் பயிற்சி முடித்த அவர் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பீகார் ரெஜிமென்ட்டின் 7வது பட்டாலியனின் காலாட்படையில் சேர்ந்தார்.
மும்பை தாஜ் ஹோட்டலில் புகுந்த தீவிரவாதிகளை அழித்து அவர்களிடம் பிணையக்கைதிகளாக இருந்தவர்களை மீட்கும் ஆபரேஷன் பிளாக் டார்ணடோவின் கீழ் 51 எஸ்ஏஜி வீரர்கள் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் தலைமையில் ஹோட்டலுக்குள் புகுந்தனர். சந்தீப் 10 கமாண்டோக்களுடன் மாடிப்படிகள் வழியாக 6வது மாடியை அடைந்தார். அவர்கள் படிக்கட்டு வழியாக இறங்கி வந்தபோது தீவிரவாதிகள் 3வது மாடியில் இருப்பதை உணர்ந்தனர். உடனே மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான படை தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது.
அடுத்த மாடிக்கு ஓடிய தீவிரவாதிகளை சந்தீப் பின்தொடர்ந்து தாக்கினார். அப்போது தீவிரவாதிகள் அவரை பின்னால் இருந்து சுட்டுத் தள்ளினர். இதில் படுகாயமடைந்த அவர் பலியாகினார். யாரும் இங்கே வரவேண்டாம், நான் அவர்களை பார்த்துக் கொள்கிறேன் என்பது தான் சந்தீப் தனது உயிர் பிரியும் முன் கூறிய வார்த்தைகள் என்று தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரது வீரத்தைப் பாராட்டி அவரது மறைவிற்குப் பிறகு அவருக்கு வீரத்திற்கு நாட்டின் உயரிய விருதான அஷோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.
அவர் இறந்து 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவர் தந்தை ஓய்வு பெற்ற இஸ்ரோ அதிகாரி கே. உன்னிகிருஷ்ணன் தினமும் தன் மகனை நினைத்து, நினைத்துப் பெருமை பட்டுக்கொண்டிருக்கிறார். தனது வீர மகனின் நினைவாக ஆதரவற்றோர் இல்லம் துவங்கவிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இதுவரை எனது மகன் சந்தீப் நினைவாக நான் எதுவும் செய்யவில்லை. ஆனால் தற்போது எனது சொந்த ஊரில் என்னால் முடிந்த அளவுக்கு நிறுவனங்கள், கிளப்கள் ஆரம்பித்து என் மகனின் பெயரை நிலைநாட்டப்போகிறேன். நான் சந்தீப் பெயரில் என்னால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்ய விரும்புகிறேன்.
ராணுவ வீரரின் பணி பணியல்ல, அது சேவை. ஒருவருக்கு பணம் சம்பாதிப்பது தான் முக்கியம் என்றால் அதற்கு பல வேலைகள் உள்ளன. பல வகைகளில் நாட்டுக்கு சேவை செய்ய முடியும். சந்தீப் ஒரு வீரன். அவர் தனது கடைமையை ஒழுங்காகச் செய்தார். அதை நினைத்து நான் பெருமைப் படுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications