புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
புதுக்கோட்டை: தனியார் கல்லூரிக்கு சீல் வைத்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்தியமங்கலம் அருகே தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை படிப்பு (சேப்டி மேனேஜ்மென்ட்) தொடர்பான தனியார் கல்லூரி ஒன்று உள்ளது.
இந்தக் கல்லூரி உரிய அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு உரிய ரசீது கொடுப்பது இல்லை என்றும் குளத்தூர் தாசில்தார் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.
இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த கல்லூரிக்கு சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து கல்லூரியின் நிர்வாகி முருகானந்தம் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு புதுக்கோட்டை இன்ஸ்பெக்டருக்கு 30.9.2011 அன்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை இன்ஸ்பெக்டர் செயல்படுத்தவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மீது கல்லூரி நிர்வாகி முருகானந்தம் மதுரை சென்னை உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயக்குனர் கலியமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராகி சம்பந்தப்பட்ட கல்லூரி தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேலாண்மை குறித்த படிப்பை நடத்த அழகப்பா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி "ஏற்கனவே இந்த நீதிமன்றம் உத்தரவிட்டபடி கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை இன்ஸ்பெக்டர் அகற்ற வேண்டும். மேலும் இது குறித்த தகவலை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் நாளை (டிசம்பர் 1ம் தேதி) அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications