செயற்கைக் கோள் சேனல்களை அச்சுறுத்தும் லோக்கல் 'கேபிள்'!
சென்னை: உள்ளூர் கேபிள் சேனல்களுக்கு கட்டண அனுமதி தரப்படுவதால், செயற்கைக்கோள் மூலமாக ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அச்சமடைந்துள்ளன.
அரசு கேபிள் டி.வி. செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பு வரை, தனியார் எம்எஸ்ஓக்களுக்கு கட்டணம் செலுத்தி உள்ளூர் சேனல்கள் நடத்தப்பட்டு வந்தன.
ஆனால், அரசு கேபிள் டி.வி. செயல்பாட்டுக்கு வந்த புதிதில் உள்ளூர் சேனல்கள் எல்லாமே மூடப்பட்டன. அரசு கேபிள் மூலம் கிடைக்கும் சேனல்களுக்கான சிக்னல்களை மட்டுமே பெற்று வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிந்தது.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிய சமயத்தில், உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி தரப்பட்டது. எந்த அடிப்படையில் இந்த அனுமதி தரப்படுகிறது என்பது தொடர்பாக அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்துக்குளேயே சர்ச்சையும் எழுந்தது.
இப்போது இந்தச் சேனல்கள் எல்லாம் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால்தான் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொகையை நிர்ணயிக்க செவ்வாய்க்கிழமை மாநிலம் முழுக்க டெண்டரும் நடந்தது.
மாநகராட்சி, பேரூராட்சி, தாலுகா அளவில் இந்த டெண்டர்கள் விடப்பட்டன. சில இடங்களில் மாவட்ட அளவிலும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் ரூ. 3.44 லட்சத்துக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.2.25 லட்சத்துக்கும், கரூர் மாவட்டத்தில் ரூ. 2.15 லட்சத்துக்கும், தருமபுரி மாவட்டத்தில் ரூ.57 ஆயிரத்துக்கும், சேலம் மாநகராட்சியில் ரூ. 7.43 லட்சம் டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே தொகையைச் செலுத்த சம்மதிப்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவராக இருந்தாலும் உள்ளூர் சேனலை நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இவ்வளவு சேனல்கள் வரும்போது செயற்கைக்கோள் மூலமாக வரும் தனியார் சேனல்களைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கட்டணச் சேனல் என்று கூறிக் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவன எம்.எஸ்.ஓ. மூலம் சிக்னல் தர மறுக்கும் தனியார் சேனல்களுக்கு இது பெரிய பாதிப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும், மாவட்ட அளவில் டெண்டர் மூலம் நிர்ணயிக்கும் தொகை அரசு கேபிள் டி.வி.க்கு கூடுதல் வருமானமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. பல இடங்களில் செவ்வாய் இரவு 11 மணி வரையிலும்கூட டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இன்று விவரங்கள் வெளியாகக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications