இந்தியத் திரையுலகில் மறக்க முடியாத ஒப்பற்ற மனிதர் தேவ் ஆனந்த்- ஜெ.
சென்னை: இந்தித் திரையுலகில்மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகில் மறக்க முடியாத ஒப்பற்ற மனிதாபிமானமிக்க நடிகர் தேவ் ஆனந்த் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தி சினிமா நடிகர் 88 வயதான தேவ் ஆனந்த் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சினிமா துறையில் 1946-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்த அவர் 60 ஆண்டுகள் அந்த துறையில் நீடித்து நிலைத்து நின்றார்.
இவர் ஹீரோவாக நடித்த ஹம் தோனோ, கலாபானி, தி கைடு மற்றும் பல படங்கள், உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட படங்கள் ஆகும்.
தனது தனித்திறமையால் வெள்ளித்திரையில் தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். மிகவும் திறமை மிக்கவரான இவர், சினிமா துறைக்கு ஆற்றிய பணிகளை மறக்க முடியாது. மனிதாபிமான மிக்கவராக திகழ்ந்தார். இவர் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் ஏதாவது ஒரு விளைவை எற்படுத்தின.
தனது படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவார். அதனால்தான் இன்று கூட அவரது படப் பாடல்கள் பிரபலமாக உள்ளன. தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை இவர் வென்றுள்ளார். இவரது மறைவின் மூலம், ஒரு பெரிய நடிகரை இந்தியா இழந்து விட்டது.
இவரது மரணம் சினிமா துறைக்கு மட்டுமின்றி தேசத்துக்கும் இழப்பாகும். அவரது மறைவு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. இந்த இழப்பை தாங்கி கொள்ளும் மனோதிடத்தை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் அருள வேண்டும் என்று கேட்டுக கொள்வதுடன், எனது ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications