பலவீனமான லோக்பால் மசோதாவுக்கு காரணம் ராகுல் காந்தி!- ஹசாரே

இன்று லோக்பால் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால், அது பலமானதாகவோ அர்த்தம் உள்ளதாகவோ இல்லை என்று கூறியுள்ள ஹசாரே, இந்த மசோதாவை நிராகரித்துள்ளார்.
இதையடுத்து அவர் மீண்டும் தனது போராட்டத்தைத் தொடங்குவார் என்று தெரிகிறது.
ஹசாரே கூறுகையில், கீழ் மட்ட அதிகாரிகளையும் லோக்பால் மசோதாவின் வரம்புக்குள் கொண்டு வருவேன் என்று என்னிடம் பிரதமர் மன்மோகன் உறுதியளித்தார். ஆனால், அதை நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கவில்லை. இதன்மூலம் மன்மோகன் சிங்கை அவர்கள் அவமதித்துவிட்டனர்.
அதே நேரத்தில் உறுதியான லோக்பால் மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என பிரதமர் உண்மையிலேயே விரும்பியிருந்தால், அதைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அதை அவர் செய்யத் தவறிவிட்டார்.
காரணம், பிரதமர் மன்மோகன் சிங் பலமானவராக இல்லை. மத்திய அமைச்சரவையிலேயே பல பிரதமர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மன்மோகன் சிங்கின் பேச்சை மதிப்பதில்லை. இது ஒரு ஆபத்தான சூழ்நிலையாகும்.
லோக்பால் மசோதாவை பலவீனமாக்கியதன் பின்னணியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இருக்கிறார். அவர் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு நெருக்கடி தந்துள்ளார்.
மேலும் இந்த மசோதா குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியதில் மத்திய அமைச்சரகள் ப.சிதம்பரம், கபில் சிபலுக்கு முழுப் பொறுப்பு உண்டு.
பலமான லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படாவிட்டால் நான் 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன். கபில் சிபலுக்கு எதிராக அவரது டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் கட்டாயம் பிரச்சாரம் செய்வேன் என்றார்.
கடந்த ஒரு வாராமாகவே ராகுல் காந்தியை ஹசாரே தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன் புனேவில் நிருபர்களிடம் பேசிய ஹசாரே, லோக்பால் மசோதாவுக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வேண்டும் என்று சொல்லும் ராகுல் காந்தி, லோக்பால் அமைப்பில் மத்திய அரசு தலையிடாது என்ற உறுதிமொழியைத் தரவில்லை.
இதன்மூலம் இந்த மசோதாவையே அர்த்தமில்லாத, பலமில்லாத ஒரு வெற்று ஆயுதமாக மாற்ற ராகுல் முயல்கிறார். மக்களை ஏமாற்றும் இந்த அரசுக்கு எதிராக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தர்கண்ட், கோவா, மணிப்பூரில் பிரச்சாரம் செய்வேன் என்றார்.
இந் நிலையில் இன்று மீண்டும் ராகுல் காந்தியை தாக்கியுள்ளார்.
இவரை காங்கிரஸ் ஆர்எஸ்எஸ்சின் முகமூடி என்று விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications