21ம் தேதி கேரளாவை ஸ்தம்பிக்க வைப்போம்- வைகோ அழைப்பு

கோவை வந்த வைகோ அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி திட்டம் தீட்டி வருகிறது. இந்த அணை உடைக்கப்பட்டால், 5 மாவட்ட மக்களுக்கும் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல், பஞ்ச பிரதேசமாக மாறிவிடும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பொய்யான தகவலை கேரளா பரப்பி வருவதால், இருமாநில மக்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கேரள மக்கள் இந்த உண்மையை உணர வேண்டும். அணையை உடைத்தால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. இதை கேரள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகை போராட்டம் 13 சாலைகளிலும் 21-ந்தேதி திட்டமிட்டபடி நடைபெறும். அறவழியில் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் கட்சி கொடிகள் கூட இல்லாமல், அமைதியாகவும் அதேநேரத்தில் நமது கோரிக்கையை வலுப்படுத்தும் வகையிலும் நடைபெறும். தமிழ்நாடு வழியாக கேரளாவுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் செல்வதை பொருளாதார முற்றுகை போராட்டத்தின் மூலம் தடுப்போம். இந்த போராட்டத்துக்கு பின்னரும் கேரளா தொடர்ந்து தனது நிலையை மாற்றிக்கொள்ளாவிட்டால், புதிய, புதிய வடிவங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரளாவை கண்டித்து பேசியதை வரவேற்கிறேன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அந்த அரசை டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு பாராட்டுதலுக்குரியது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும்.
ஆனால் தனது பேச்சை 24 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுள்ளார் ப.சிதம்பரம். இது கண்டனத்துக்குரியது. ஒரு நாள்கூட அவரது நிலையில் ஸ்திரமில்லை என்பது வருத்தத்திற்குரியது.
கேரளாவில் உள்ள அரசியல் கட்சிகள் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கிறது. கேரளாவில் தமிழர்கள் மற்றும் தமிழக மக்களின் கடைகள் தாக்கப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் அதேநேரம், தமிழ்நாட்டில் உள்ள கேரள மக்களின் கடைகளை தாக்கி யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது. இதற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications