எடுத்த எடுப்பிலேயே எக்குத்தப்பாகப் போய் விட்டது எதியூரப்பாவின் அரசியல் பயணம்.
கர்நாடகத்தில் பாஜகவை ஒரு வலுவான சக்தியாக மாற்றிய பெருமை எதியூரப்பாவுக்கு மட்டுமே உண்டு. அதில் யாருக்கும் சந்தேகம் கிடையாது. ஆனால் அவருக்கும், பதவிக்கும் ராசியில்லாமல் போய் விட்டது.
முதல் முறையாக குமாரசாமியுடன் இணைந்து கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்ந்த போதும் சரி, பின்னர் தனித்து ஆட்சியமைத்த போதும் சரி பிரச்சினைகளின் மத்தியில்தான் ஒவ்வொரு நாளையும் ஓட்ட வேண்டியதாயிற்று.
குமாரசாமியுடன் 50-50 முறையில் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டபோது துணை முதல்வராக இருந்தார் எதியூரப்பா. பின்னர் குமாரசாமி காலை வாரி விடவே ஆட்சியிலிருந்து விலக நேரிட்டது.
பின்னர் தென்னிந்தியாவின் முதல் பாஜக அரசை அவர் அமைத்தபோது அனைவராலும் பாராட்டப்பட்டார் எதியூரப்பா. முதல்வராக முதல் முறையாக பதவிக்கு வந்த நாள் முதல் அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள். அதையெல்லாம் தகர்த்து தவிடுபொடியாக்கி வந்த எதியூரப்பாவுக்கு, ரெட்டி சகோதரர்கள் மூலம்தான் மிகப் பெரிய சிக்கல் முதல் முறையாக வந்தது.
காங்கிரஸையும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தையும் எளிதாக சமாளிக்க முடிந்த அவரால் கட்சிக்குள்ளேயே கிளம்பிய பூசல்களும், கோஷ்டி மோதல்களும், அதிருப்தி அலைகளும் சமாளிக்க முடியாததாக மாறிப் போயின.
நாட்டையே உலுக்கிய மாபெரும் சுரங்க ஊழல்கள், ரெட்டி சகோதரர்களின் பண பலம், ஆள் பலம், மிரட்டல் பலம், நில ஒதுக்கீட்டில் அவரது குடும்பத்தினர் சிக்கியது என ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவித்தார் எதியூரப்பா. இருந்தாலும் முதல்வர் பதவியிலிருந்து விலகாமல் கெட்டியாக உட்கார்ந்திருந்தார் எதியூரப்பா.
கூடவே மாநில ஆளுநர் பரத்வாஜ் வேறு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வந்ததால் இரட்டைத் தலைவலியாகி விட்டது எதியூரப்பாவுக்கு. இறுதியில் பிரச்சினைகள் முற்றிப் போனதால் கட்சி மேலிடமே, எதியூரப்பாவை பதவியிலிருந்து விலக உத்தரவிட்டது. அப்போதும் கூட சமாளிக்கப் பார்த்தால் எதியூரப்பா. தனது ஜாதி எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் கட்சி மேலிடத்தையும் மிரட்டப் பார்த்தார். ஆனால் அது நடக்காததால், ஜூலை 31ம் தேதி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
தனது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாக போய் தனது ராஜினாமாவைக் கொடுத்து மீசையில் மண் ஒட்டவில்லையே என்று அசத்தினார் எதியூரப்பா. அதன் பின்னர் நில ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிக்கிய அவர் கைது செய்யப்பட்டு மருத்துவமனை, மருத்துவமனையாக ஊர்வலம் போய் மக்கள் மத்தியில் பெரும் கேலிப் பொருளாகிப் போனார். இறுதியில் பரப்பன அக்ரஹாரா சிறையில் சில நாள் வாசத்திற்குப் பின்னர் தற்போது ஜாமீனில் விடுதலையாகி கர்நாடக பாஜக அரசை மறைமுகமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications