வெந்நீர் ஊற்றி கொல்லப்பட்ட சாந்தவேலு உடலை போலீசார் எப்படி எரிக்கலாம்?: சீமான்

Subscribe to Oneindia Tamil

Seeman
சென்னை: சபரிமலையில் வெந்நீர் ஊற்றி கொல்லபப்ட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சாந்தவேலுவின் உடலுக்கு போலீசார் எரியூட்டியதற்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது,

சபரிமலைக்குச் சென்ற திருவேற்காட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சாந்தவேலு மீது மலையாளிகள் சிலர் சுடுநீர் ஊற்றி நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த அவரது உடலை திடீரென்று கைப்பற்றிய காவல் துறையினர், அவரது உறவினர்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, அம்பத்தூர் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, உடலை எரியூட்டியிருப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கை. இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து திருவேற்காட்டியில் உள்ள அவரது இல்லத்திற்கு சாந்தவேலுவின் உடல் கொண்டு வரப்பட்டது முதல் உடனடியாக உடலைத் தகனம் செய்துவிடுமாறு காவல் துறையினர் தொடர்ந்து அவரது உறவினர்களை வற்புறுத்தி உள்ளனர். எதற்காக அப்படி வற்புறுத்த வேண்டும் என்று தெரியவில்லை.

கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது மனைவியிடம் நடந்த சம்பவத்தை விவரித்துள்ள சாந்தவேலு, பம்பா அருகே ஒரு தேனீர் கடைக்கு சென்ற போது அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் சுடுநீரை கொண்டு வந்து தன் மீது ஊற்றியதாகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.

தன்னோடு வந்த குருசாமி உள்ளிட்ட அனைவரும் தன்னை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும், வேறு தமிழர்கள் 2 பேர் தன்னை கோட்டயம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை சுட்டிக்காட்டி அவரது மனைவி சென்னை காவல் துறையினரிடம் புகார் அளித்த பிறகும் கூட, இச்சம்பவத்தை கண்டித்து தமிழக அரசு ஒரு அறிக்கை கூட வெளியிடாதது வேதனை அளிக்கின்றது. தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி உறுதி அளித்தார்.

அவரது உறுதி என்ன ஆனது என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். அதற்கு மாறாக தன்னிடம் இருந்த நனைந்து போன ரூ.50 நோட்டை தேனீர் கடையில் இருந்த வென்னீர் கொதிப்பான் மீது சாந்தவேலு வைத்தபோது வென்னீர் கொதிப்பான் அவர் மீது சாய்ந்துவிட்டது என்றும், அதனால் அவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது என்றும் கேரள காவல்துறை கட்டிவிட்ட கதையை இங்கே பரப்புகின்றனர்.

ரூபாய் நோட்டை காய வைக்கும்போது வென்னீர் கொதிப்பான் அவர் மீது கவிழ்ந்துவிட்டது என்றால், சாந்தவேலுவிற்கு நெஞ்சிலும், வயிற்றிலும் தான் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக முதுகிலும், இடுப்பிலும் தீக்காயங்கள் ஏற்பட்டது எப்படி? இதன் மூலம் இது கட்டுக்கதை என்பது புலனாகின்றது? அங்கே நடந்தது என்ன என்பதை புலனாய்வு செய்து உண்மையைக் கூற வேண்டிய காவல் துறை, இச்சம்பவத்தையே மூடி மறைக்கப் பார்க்கிறதா என்பதே நாங்கள் எழுப்பும் கேள்வியாகும்.

இப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் நடந்திருந்தால், தற்போது கேரளத்தில் என்ன ஆகியிருக்கும்? அங்குள்ள அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழர்கள் மீது பாய்ந்திருக்க மாட்டார்களா? தமிழன் அடிப்பட்டால், உயிரிழந்தால் மட்டும் அதனை ஒரு சாதாரண சம்பவம் ஆக்குவது ஏன்?

சாந்தவேலு ஒரு ஏழைத் தொழிலாளி என்பதால் அவரது இறப்பிற்கு கூட மரியாதை இல்லையா? அவரது உடலுக்கு ஈமச் சடங்குகள் செய்யக் கூட காவல்துறை அனுமதிக்காதது ஏன்? இதற்கெல்லாம் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

தனது மாநிலத்திற்கு வந்தவரை ஐயப்ப பக்தர் என்றும் பார்க்கவில்லை, தன்னைப் போல் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்றும் கேரளா பார்க்கவில்லை. அவர் தமிழர், தாங்கள் மலையாளிகள் என்று கருதிய காரணத்தினால்தான் இப்படிப்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது இனவெறி அல்லாமல் வேறு என்ன? என்று கேட்கிறோம். இலங்கை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட இனப்படுகொலைப் போரில் மத்திய அரசில் இருந்த, இருக்கும் மலையாள அதிகாரிகளின் நடவடிக்கைகளும், இப்போது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழினத்தின் உரிமைகளுக்கு எதிரான கேரள அரசின், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளும் தமிழினத்தை எதிரியாக பாவித்து செய்யப்படுவதாகவே உள்ளது.

இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை என்பதெல்லாம் தமிழனுக்கு மட்டும்தானா என்பதை நம் நாட்டின் தேசியக் கட்சிகள் விளக்க வேண்டும். தனது இனத்தவன் அடிபடும் போது இதுநாள் வரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழன் இதற்கு மேலும் அப்படித்தான் இருப்பான் என்று எவரும் தவறாக மதிப்பிடக்கூடாது.

சாந்தவேலுவை தாக்கிய மலையாளிகள் மீது கொலை வழக்குத் தொடரப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும். இதனை கேரள அரசும், காவல் துறையும் செய்யவில்லை என்றால், அப்பிரச்சனையை சட்ட ரீதியாக தமிழக அரசு உரிய வழியில் அணுக வேண்டும். ஏழை ஐயப்ப பக்தருக்கு இழைக்கபட்ட அநீதிக்கு நீதி கிடைத்திட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+