முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இறுதி அறிக்கை-இன்று முடிவு செய்கிறது ஆனந்த் குழு

இன்று முடிவு செய்யப்படும் இறுதி அறிக்கை அடுத்த மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தனது தீர்ப்பை அளிக்கும்.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதி, மண் வளம், கனிம வளம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தயாரித்து குழுவிடம் தாக்கல் செய்துள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து முல்லைப் பெரியாறு அணை தொடர்பான இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் பணியை நீதிபதி ஆனந்த் குழு செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறும்.
இக்குழு ஏற்கனவே 3 இடைக்கால அறிக்கைகளை உச்சநீதிமன்றத்தில் கொடுத்துள்ளது. மேலும் குழுவின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்தில் முடிவடைகிறது. இருப்பினும் அதற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்ச நீதிமன்றம் 2010-ம் ஆண்டு நியமித்தது. இந்தக் குழுவில் தமிழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், கேரளத்தின் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ், இரண்டு மத்திய அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு கடைசியாக கடந்த 2-ம் தேதி கூடியது. அப்போது தமிழகம், கேரளம் சார்பில் அணை தொடர்பான வாதங்களை அந்தந்த மாநில வழக்குரைஞர்கள் முன்வைத்தனர். நில அதிர்வால் அணை பலவீனமாக உள்ளது என்று கேரள அரசு முன்வைத்த குற்றச்சாட்டை நீதிபதி ஆனந்த் குழு நிராகரித்தது.
அணையின் நீர் அளவை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் குழு நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளின் வாதங்கள், தேவையான ஆவணங்கள் ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த கூட்டத்துடன் முடிந்துவிட்டது. எனவே, இரு அரசுகளும் இனிமேல் எந்த கருத்தையும் குழு முன்பு எடுத்துவைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்திற்குச் சாதகமானதாகவே அனைத்து நிபுணர் குழு அறிக்கைகளும், ஆய்வுகளும் இருப்பதால் தமிழக தரப்பு பெரும் நம்பிக்கையுடன் உள்ளது.












Click it and Unblock the Notifications