தென்மாவட்டங்களில் கள்ள நோட்டு புழக்கம்: தீவிரவாதிகள் கைவரிசை
நெல்லை: நெல்லை வங்கிகளில் இருந்து சென்னைக்கு சென்ற ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுகள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஏராளமான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளதை சமீபத்தில் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் கள்ள நோட்டுகளுடன் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் ஷேக் என்ற வாலிபர் பிடிபட்டார். அவரிடம் இருந்து புதுவை போலீசார் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அவருடன் தங்கியிருந்த மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் சென்னை, புதுவை தவிர தென்மாவட்டங்களிலும் ஏராளமான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் வங்கிகளில் கட்டப்படும் ரூபாய் நோட்டுகளை மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கள்ள நோட்டுகளா என்று ஆய்வு செய்து அதன் பிறகே மறுசுழற்சிக்கு விடுகிறார்கள்.
இதன்படி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி பொது மேலாளர் லோகநாதன் நெல்லையிலுள்ள வங்கிகளில் இருந்து சென்ற ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்தார். இதில் நெல்லை இநதியன் வங்கிக் கிளையில் இரண்டு நூறு ரூபாய் கள்ள நோட்டுகளும், மகராஜா நகர் ஐஓபி வங்கிக் கிளையில் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டும், ஸ்ரீபுரம் ஸ்டேட் வங்கியில் ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டும் நல்ல ரூபாயுடன் கலந்து காணப்பட்டது. இதனால் நெல்லை உள்பட தென்மாவட்டங்களிலும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் லோகநாதன் நெல்லை மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.
கமிஷனர் கருணாசாகர் உத்தரவின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸபெக்டர் எக்ஸ்கால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ள நோட்டு கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொது மக்கள் 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்க அஞ்சுகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட பலர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications