உபி தேர்தலில் கிரிமினல்கள்: முதலிடத்தில் சமாஜ்வாடி... இரண்டாம் இடத்தில் பாஜக!

இந்தக் கட்சிக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனும் அளவுக்கு பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவும் உள்ளன. அட பரவாயில்லையே, எனும் அளவுக்கு குறைவான கிரிமினல் பின்னணி கொண்டவர்களை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.
பிப்ரவரி 8-ந் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 867 பேர் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.
இவர்களில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 284 வேட்பாளர்களின் பின்னணியை தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று ஆய்வு செய்தது.
கிரிமினல் பின்னணி கொண்டவர்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டதில் முதலிடம் மாயாவதிக்கு கிடைக்கவில்லை. முலாயமின் சமாஜ்வாதி கட்சிதான் அதிகபட்சமான 28 'கிரிமினல்' பின்னணி கொண்டவர்களை முதல் கட்ட தேர்தலில் களம் இறக்கியுள்ளது.
2-வது இடத்தில்தான் மாயாவதின் பகுஜன் சமாஜ் பிடித்துள்ளது. யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல மாயாவதியோடு இணைந்து 2-வது இடத்துக்கு மல்லுகட்டுகிறது பாரதீய ஜனதா கட்சி. இரண்டு கட்சிகளும் தலா 24 கிரிமினல் வழக்குகள் கொண்டவர்களை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன.
நல்லவேளை... காங்கிரஸ் கட்சிக்கு இதில் 3-வது இடம்தான். இந்தக் கட்சி நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 15 பேர் மீது மட்டும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. அடுத்த கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் இந்த இடத்திலிருந்து முதலிடத்துக்கு காங்கிரஸ் ஜம்ப் பண்ணாமல் இருந்தால் சரி!
இந்த அரசியல் கட்சி வேட்பாளர்கள் 284 பேரில் 144 பேர் கோடீஸ்வரர்கள்!
இதில் மாயாவதியின் பகுஜன் கட்சிக்குத்தான் முதலிடம். பகுஜன் வேட்பாளர் அஜய்பிரதாப் சிங்கின் சொத்து மதிப்பு ரூ12 கோடி. 2-வது இடம் காங்கிரசுக்கு கிடைத்துவிட்டது. காங்கிரசின் செளத்ரி ரவீந்திர பிரதாப்பின் சொத்து மதிப்பு ரூ7 கோடி. மூன்றாவது இடமும் கூட பகுஜன் கட்சிக்கே. பகுஜன் சமாஜின் சங்க்ராம் சிங்கின் சொத்து மதிப்பு ரூ6 கோடி.
ஐக்கிய ஜனதா தளமும் இதேபோல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர் குசலேந்திரநாத்துக்கு 2007 தேர்தலின் போது இருந்த சொத்து மதிப்பு ரூ 52 லட்சம். தற்போதைய மதிப்பு ரூ68.42 லட்சம். இதுவே அதிக அளவினா சொத்து மதிப்பு உயர்வு.
இன்னொரு வினோதமும் நிகழ்ந்திருக்கிறது. ஜலால்பூர் தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் ஷேர் பகதூரின் சொத்து மதிப்பு கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 35 சதவீதம் குறைந்து போய்விட்டதாம்.. என்னடா இது!


Click it and Unblock the Notifications
