திமுகவில் வலுக்கிறது கோஷ்டி மோதல்: ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தார் ஸ்டாலின்

சென்னையில் நேற்று நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தொடர்பான தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தை கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளது கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இதுபோன்ற கூட்டங்களை அழகிரிதான் புறக்கணிப்பார். நிலைமை எப்படி இருந்தாலும் ஸ்டாலின் எதையும் புறக்கணிக்காமல் கலந்து கொள்வார். ஆனால் அவரே புறக்கணித்தது திமுக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
பிப்ரவரி 3-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுக் கூட்டத்தில் ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது.
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை ஏற்பட்டது.
பொதுக்குழுவில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இதனை சுட்டிக்காட்டி, இதுதான் இப்போதைய தி.மு.க.வின் லட்சணம் என்று குமுறிக் கொட்டினார். தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்... மீண்டும் தேர்தல் நடத்தலாம் என்றும் அவர் ஆவேசமாக் பேசியது ஸ்டாலின் தரப்பை அதிர வைத்துள்ளது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் சங்கரன்கோவில் சட்டப்பேரவைத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் பொது செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தென்மண்டல அமைப்பு செயலாளர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தலைவர் பதவி தொடர்பாக பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்பால் அவர் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தார். தி.மு.க.வின் அனைத்து உயர்மட்ட கூட்டத்திலும் தவறாமல் பங்கேற்ற அவர் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சட்டப்பேரவைக்கும் அவர் செல்லவில்லை. துரைமுருகன் தலைமையில் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications