கூரையைப் பிரித்து மளிகைக் கடையில் திருடிய தேமுதிக நிர்வாகி: மக்கள் தர்ம அடி
சேலம்: சேலம் மாவட்டத்தில் மளிகைக் கடை கூரையைப் பிரித்து ரூ.10,000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களை திருடிய தேமுதிக நிர்வாகியை ஊர் மக்கள் பிடித்து நையப் புடைத்து மின்கம்பத்தில் கட்டிவைத்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ளது பைத்தூர் கிராமம். இந்த கிராமத்தை சுற்றியுள்ள வீடுகளின் முன்பு வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், கட்டிப்போடப்பட்டிருக்கும் ஆடு, கோழி மற்றும் தோட்டங்களில் இருக்கும் மோட்டார் ஆகியவை அடிக்கடி மாயமானது.
இதையடுத்து திருடர்களை கையும், களவுமாகப் பிடிக்க எண்ணிய கிராமத்தார் இளைஞர்களை ஒன்று திரட்டி பாதுகாப்பு குழவை அமைத்தனர். அந்த குழு இரவு நேரத்தில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு பைத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கிருஷ்ண மோகன் என்பவரின் மளிகைக் கடை கூரையைப் பிரித்துக் கொண்டு 4 பேர் உள்ளே இறங்குவதை பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் பார்த்துவிட்டார். உடனே அவர் எஸ்.எம்.எஸ். மூலம் தனது குழுவைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் 20க்கும் அதிகமான இளைஞர்களுக்கு அங்கு வந்துவிட்டனர்.
கடைக்குள் இருக்கும் திருடர்களை கையும், களவுமாகப் பிடிப்பதற்காக அந்த 4 பேர் கடையில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்தனர். கடையில் இருந்து ரூ.10,000 மதிப்புள்ள மளிகை மற்றும் உணவுப் பொருட்களுடன் அந்த 4 பேரும் வெளியே வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பாதுகாப்பு குழுவினர் அவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்து மின்கம்பத்தில் கட்டிவைத்தனர்.
திருட்டில் ஈடுபட்டவர்கள் அதே ஊரைச் சேர்ந்த குமார் (30), மணிகண்டன் (21), சிவா (18) மற்றும் பன்னீர் (18) என்பது தெரிய வந்தது. இந்த கும்பலில் முக்கிய பங்கு வகிக்கும் குமார் பைத்தூர் கிளை தேமுதிக பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications