முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்பு கருவி நிறுவும் கேரளா-தடுக்க பிரதமருக்கு ஜெ கடிதம்

இது தொடர்பாக மன்மோகன் சிங்குக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் மட்டத்தை அளவிட 'ரியல் டைம்' கண்காணிப்பு அமைப்பை நிறுவ கேரள அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறது என்று வெளியாகி உள்ள செய்திகளை உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
அணையில் தண்ணீர் மட்டத்தை அளவிட 'ரியல் டைம்' கண்காணிப்பு அமைப்பை நிறுவ மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தோடு கேரள அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே உங்களுக்கு எழுதிய முந்தைய கடிதங்களில் நான் சுட்டிக்காட்டி உள்ளது போல முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்றும் 142 அடிக்கு தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும் கேரள அரசு தொடர்ந்து மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு அணையின் பாதுகாப்பை குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் கண்காணிப்பு கருவியை பொருத்தும் கேரள அரசின் செயலானது அணையின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சியே ஆகும். மேலும் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் போது கேரள அரசின் இந்த செயல் முற்றிலும் உள்நோக்கம் கொண்டது.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் அதன் அமைப்புகள் தமிழக அரசுக்கு சொந்தமானது. தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனுமதி பெறாமல் மத்திய அமைச்சகத்தோடு இணைந்து கண்காணிப்பு கருவியை முல்லைப் பெரியாறு அணையில் பொருத்தும் கேரள அரசின் முடிவானது கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசியல் சாசனத்தின் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.
எனவே, கேரள அரசோடு இது தொடர்பாக எந்தவித ஒப்பந்தத்திலும் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால் அதனை ரத்து செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு உரிமை உள்ளது என்பதால் தமிழகத்தின் நலனுக்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று கேரள அரசு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்திரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
4.12.2011 அன்று எழுதிய கடிதத்தில் அணையின் பாதுகாப்பிற்கு மத்திய பாதுகாப்பு படையை அனுப்ப வேண்டும் என்று கோரியிருந்தேன். முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பில் தலையிடும் கேரள அரசின் தன்னிச்சையான செயலானது அணையின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் எனது முந்தைய கோரிக்கையை உறுதிப்படுத்தி உள்ளது.
எனவே மத்திய பாதுகாப்பு படையை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications