ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: வழக்கறிஞர் ஆச்சார்யாவை பதவி விலக வைக்க நெருக்கடி தரவில்லை-கட்காரி

Subscribe to Oneindia Tamil

Nithin Gadkari
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வரும் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யாவை பதவி விலக வைக்க நாங்கள் நெருக்கடி தரவில்லை என்று பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

ஜெயலலிதா, அவரது முன்னாள் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் (ஜெயலலிதா-சசிகலாவுக்கு எதிராக) சிறப்பு அரசு வழக்கறிஞராக கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா ஆஜராகி வருகிறார்.

இந் நிலையில், ஒருவரே சிறப்பு அரசு வழக்கறிஞராகவும், கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகிக்கக் கூடாது என்று கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரை ஜெயலலிதா வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக பாஜக அரசு நிர்பந்தம் செய்தது. அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க பாஜக முயன்று வரும் நிலையில் இந்த நிர்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கர்நாடக பாஜக அரசின் நிர்பந்தந்துக்குப் பணியாத ஆச்சாரியா, அந்தப் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக தனது அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கு அதிர்ச்சி தந்துள்ளார்.

இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கில் அவரே தொடர்ந்து ஆஜராக உள்ளார்.

தனது ராஜினாமா குறித்து பி.வி.ஆச்சார்யா கூறுகையில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது. இந்த வழக்கு விசாரணையை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திசை திருப்ப வேண்டும் என்பதற்காக, பாஜகவின் டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே கர்நாடக அரசு எனக்கு நெருக்கடி கொடுத்தது.

நான் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வருவது தெரிந்தே தான் மாநில அரசு எனக்கு அட்வகேட் ஜெனரல் பதவியைத் தந்தது. இப்போது நெருக்கடி கொடுத்தால் நான் சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விடுவேன் என்று கர்நாடக அரசு தப்புக் கணக்கு போட்டுவிட்டது.

அரசு அட்வகேட் ஜெனரல் பதவியை விட, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்த சிறப்பு வழக்கறிஞர் பொறுப்பே மேலானது என்று கருதிதான், அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார் ஆச்சாரியா.

கட்காரி மறுப்பு:

ஆனால், இதை பாஜக தலைவர் நிதின் கட்காரி மறுத்துள்ளார். நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கட்காரி, அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நாங்கள் யாரையும் நிர்ப்பந்தம் செய்யவில்லை. நாங்கள் யாரையும் விலக்கவும் இல்லை என்றார்.

நம்பிருவோம்....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+