கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்-ஜெ.

Subscribe to Oneindia Tamil

CM At The Passing Out Parad
சென்னை: சட்டத்தை மதிக்கும் மக்களிடத்தில் நண்பனாகவும், இனிமையாகவும் பழக வேண்டும். அவர்களின் மதிப்பு மற்றும் மரியாதையை பெறும் வகையில், உங்களுடைய நடத்தை விளங்க வேண்டும். அதே சமயத்தில், வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் ஆகியோர் அஞ்சும் வகையில் அவர்களை இரும்புக்கரம் கொண்டு, அடக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை, ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது. இதில் மொத்தம் 307 பெண் அதிகாரிகள் உள்பட 1061 சப்இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஒரு வருடமாக இவர்களுக்கு இங்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

விழாவில் முதல்வர் ஜெயலலிதா நீண்ட உரையாற்றினார். அவரது பேச்சின் விவரம்:

உலகத் தரம் வாய்ந்த, இந்த தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெறும் பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் முதன் முறை முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்தே, தமிழகக் காவல் துறை தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் தனிச் சிறப்பு பெற்று திகழ வேண்டும் என்பதும்; அவ்வாறு தமிழகக் காவல் துறை திகழ்வதற்கு ஏதுவாக, உலகத் தரம் வாய்ந்த காவல் உயர் பயிற்சியகம் தமிழ்நாட்டில் நிறுவப்பட வேண்டும் என்பதும் எனது கனவாக இருந்தது. அதன் அடிப்படையில், தமிழகக் காவல் துறை மிகச் சிறந்த காவல் துறையாக விளங்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை நான் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போதெல்லாம் தொடர்ந்து எடுத்து வந்துள்ளேன்.

2004 ஆம் ஆண்டு என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட உலகத் தரம் வாய்ந்த, இந்த காவல் உயர் பயிற்சியகம், காவல் துறை அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பது எனக்கு மெத்த மகிழ்ச்சியினை அளிக்கிறது. முதன் முறையாக, ஒரே நேரத்தில் 1061 உதவி ஆய்வாளர்கள், தங்களது பயிற்சியினை இன்று நிறைவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் பயிற்சியில், 307 பெண் உதவி ஆய்வாளர்கள் ஆண்களுக்கு இணையாக, தங்களது பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளனர் என்பதை அறியும் போது, “ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்”, என்ற பாரதியாரின் வாக்கு மெய்ப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டு நான் மிகுந்த மன நிறைவு அடைகிறேன்.

ஒரு மாநிலம் வளர்ச்சிப் பெற்றதற்கான அறிகுறி, அதன் மக்கள் வளமுடன் வாழ்வதே ஆகும். மக்கள் வாழ்வில் வளம் பெற மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு பல காரணிகள் உள்ளன. மக்களின் மனித வள மேம்பாடு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்; மாநிலத்தின் சமூக மூலதனம் மேம்படுவது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும். எனவே தான், எனது தலைமையிலான அரசு, சமூக மூலதனத்திற்கான பல்வேறு திட்டங்களையும்; மனித வள மேம்பாட்டிற்கான திட்டங்களையும்; தனி மனித பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

சமூக பொருளாதார வளர்ச்சியும், தனி மனித மேம்பாடும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை சார்ந்தே இருக்கும் என்பதால்; பொருளாதார வளர்ச்சி காரணிகளான தொழில் வளர்ச்சி மேம்பாடு, கட்டமைப்பு மேம்பாடு ஆகியவையும் சிறப்புற அமைய வேண்டும். இதற்கான திட்டங்களையும் எனது அரசு செயல்படுத்தி வருகிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தனி மனித மேம்பாடும் நிலைத்திட இன்றியமையாததாக விளங்குவது அமைதி. அத்தகைய அமைதி சூழலை ஏற்படுத்துவதில், காவல் துறை முக்கிய பங்காற்றுகிறது. எனவே தான், நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம், சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதற்கும்; காவலர்கள் எவ்வித அச்ச உணர்வும், இடையூறும் இன்றி தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும், செம்மையாகவும், சட்டப்படியும் ஆற்றிட ஏதுவான சூழ்நிலையை நான் ஏற்படுத்தித் தருகிறேன்.

காவலர்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டும், அவர்கள் தங்கள் பணியினை திறம்பட ஆற்றிட இயலாது. காவலர்கள், தங்களது கடமையை திறம்பட ஆற்றுவதற்கு பயிற்சி மிகவும் அவசியம் ஆகும்.

பயிற்சி தான் மனிதனை பக்குவப்படுத்தும். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் பயிற்சி பெற்றால் தான் ஒருவர் தன்னுடையப் பணியை திறமையாகவும், செம்மையாகவும் செய்ய இயலும். “Excellence is an art won by training and habituation” என்றார் அரிஸ்டாட்டில். அதாவது, “உயர் திறமை” என்னும் கலையை, பயிற்சி மற்றும் வழக்கத்தின் மூலமே, தன்வயப்படுத்த முடியும் என்று கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில், இந்த தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் காவல் துறை அதிகாரிகளுக்கு சிறந்த பயிற்சியை அளித்து வருகிறது.

இந்தப் பயிற்சியகம், தனித்தன்மை வாய்ந்த சுற்றுச்சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் கூடியுள்ளதோடு மட்டுமல்லாமல், திறமையான பயிற்சியாளர்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்தப் பயிற்சியகம், பல்வேறு புது உத்திகளை உள்ளடக்கிய பாடத் திட்டத்தை உருவாக்கி, அவற்றை பயிற்சி பெறுபவர்களுக்கு அளித்து வருகிறது. சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் முதல் கணினிசார் குற்றங்கள் வரை பல்வேறு குற்ற நிகழ்வுகளை கையாளுவதற்கான பயிற்சிகளை, இப் பயிற்சியகம் அளித்து வருகிறது.

சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் வைரக் கல் எவ்வாறு பட்டை தீட்டப்பட்டு, அணிகலனாக அணிவதற்கு ஏற்ற ஒளி வீசும் வைரமாக உருப் பெறுகிறதோ; அது போல, வீரம், சாந்தம், கருணை, நுண்ணறிவு ஆகியவற்றை நீங்கள் பெறும் வகையில், இங்கே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியின் மூலம், களப்பணி ஆற்றும் திறன்; ஆழ்ந்த தொழில்முறை தலைமைப் பண்பு; பகுத்தறியும் திறன்; மென் கணினித் திறன் ஆகியவற்றை நீங்கள் நன்கு பெற்று இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இது மட்டுமல்லாமல், கணினி சார் பயிற்சி; கணினி சார் குற்றங்களை கையாளுவது; கமாண்டோ பயிற்சி; வனப்பகுதியில் முகாமிட்டு கடமையாற்றும் திறன்; ஆயுதங்களை கையாளுதல்; குறி பார்த்து சுடுதல்; நுண்ணறிவுத் தகவல்களை சேகரித்தல்; பொதுமக்களின் உணர்வுகளை ஆய்ந்தறிதல்; பண்புடன் நடந்து கொள்ளும் திறன் என மாறுபட்ட கோணங்களில் நீங்கள் பயிற்சி பெற்று இருப்பீர்கள்.

இந்த பயிற்சியின் மூலம், சட்டம் ஒழுங்கை எப்படி பராமரிக்க வேண்டும்; பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் நீங்கள் முழுமையாக கற்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்கமே ஆகும். “ஒழுக்கம் விழுப்பம் தரும்”; “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை”; என்னும் ஆன்றோர் வாக்குகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. ஒழுக்கம் என்பது எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும், தூய்மையாக நடந்து கொள்வதாகும். இவ்வொழுக்கமே, மனிதனை மனிதனாகவும், தெய்வமாகவும் உயர்த்தும் வன்மை பெற்றிருத்தலால், இது உயிரைக் காட்டிலும் உயர்வானது. ஒழுக்கம் ஒருவனுக்கு மிகப் பெரிய சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் மேலானது என்றார் வள்ளுவப் பெருந்தகை.

உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உடை, உணவு, உடற் பயிற்சி ஆகியவை இன்றியமையாதவையாக விளங்குகின்றன. இதைப் போல, அகம் தூய்மையாக விளங்க ஒழுக்கம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். அக ஒழுக்கம், புற ஒழுக்கம் இரண்டுமே ஒரு மனிதனுக்கு, நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை ஆகும். ஒழுக்கமே உயிர், ஒழுக்கமே உண்மைச் செல்வம். ஒழுக்கத்தினால் ஒருவன் அடைவது மேன்மை. ஒழுக்கம் தவறினால் எய்தாப்பழியே மிஞ்சும்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒழுக்கம், காவல் துறையினருக்கு இன்றியமையாதது. ஒழுக்கம் இருந்தால் தான், விருப்பு வெறுப்பின்றி; வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி; சட்டத்தின் மாட்சிமையை நிலை நிறுத்தும் வண்ணம், காவல் துறையினர் தங்கள் கடமையை ஆற்ற முடியும். அவ்வாறு கடமை ஆற்றும் போது தான், காவலர்கள் தங்கள் பணியினை செவ்வனே செய்கிறார்கள் என்று மக்களே காவல் துறையினரின் பணிகளை பாராட்டுவார்கள்.

சட்டம் - ஒழுங்கு பராமரிக்கும் பணியினை நீங்கள் மேற்கொள்ளும் போது, சட்டம் மனித சேவைக்காக உருவாக்கப்பட்டது தான் என்பதை நீங்கள் மனதிலே கொள்ள வேண்டும். மனித நேயத்தை மறந்து சட்டப்படி நடப்பது என்பது சரியாக இருக்காது.

மனித வாழ்வு சிறப்புற மேம்படுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை தான் சட்டங்கள். சட்டத்தை செயல்படுத்தும் போது, மனிதநேயத்துடன் அதனை செயல்படுத்த வேண்டும். அதே நேரம், தகுதி இல்லாதவர்களிடத்தில் அபரிமிதமான கருணை இருக்கக் கூடாது.

மிகக் கொடூரமான குற்றவாளிகளையும் மன்னித்து, விடுவித்து விடும் மனப்பாங்கு ஒரு காவல் துறை அதிகாரியிடம் இருந்தது. கொடுங் குற்றங்களை புரிந்த குற்றவாளிகள் மீதும் வழக்கு பதிவு செய்யாமல், அவர்கள் திருந்த வாய்ப்பளிப்பது தான் அகிம்சை என்று அவர் நினைத்து இருந்தார். பல கொள்ளைகளை நிகழ்த்திய கடும் குற்றவாளி ஒருவன் அவர் முன் நிறுத்தப்பட்டான். அதற்கான தகுந்த ஆதாரங்களும் காட்டப்பட்டன.

இருப்பினும், அந்தக் குற்றவாளிக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், குற்றவாளிக்கு அறிவுரை வழங்கி, அவனை அனுப்பிவிட்டார். ஒரு நாள் அத்திருடன், அந்தக் காவல் துறை அதிகாரியின் வீட்டிற்கே திருடச் சென்றான். நகைகளையும், பொருட்களையும் திருடும் போது, அதிகாரியின் மனைவி அங்கு ஏற்பட்ட சத்தத்தால் விழித்துக் கொண்டுவிட்டார். அதைப் பார்த்த குற்றவாளி, சற்றும் தயங்காமல், அதிகாரியின் மனைவியையே கொன்றுவிட்டு தப்பித்துவிட்டான்.

எனவே, தகுதியானவர்களிடம் தான் கருணை காட்ட வேண்டும். காவல் துறையில் பணிபுரியும் நீங்கள், சட்டத்தை நிலைநாட்டுவதில், மனித நேயத்துடன் பணிபுரியும் அதே நேரத்தில், மென்மையான அணுகுமுறை பயன்பெறாத இடத்தில் கடினமான அணுகுமுறையை பயன்படுத்த வேண்டும். ஆனால், அந்த கடினமும் தேவையான அளவுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியகத்தின் மூலம், மனித நேயத்துடன் கூடிய அணுகுமுறையை நீங்கள் நிச்சயம் பெற்று இருப்பீர்கள். இன்றைய மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்ப, நீங்கள் அனைவரும் கடமை உணர்ச்சியுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும். சட்டத்தை மதிக்கும் மக்களிடத்தில் நண்பனாகவும், இனிமையாகவும் பழக வேண்டும். அவர்களின் மதிப்பு மற்றும் மரியாதையை பெறும் வகையில், உங்களுடைய நடத்தை விளங்க வேண்டும். அதே சமயத்தில், வன்முறையாளர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் ஆகியோர் அஞ்சும் வகையில் அவர்களை இரும்புக்கரம் கொண்டு, அடக்க வேண்டும்.

இது போன்ற, பணி ஏற்பதற்கு முன் உள்ள பயிற்சிகளும், பணியிடை பயிற்சிகளும், காவலர்கள் அறிவுத் திறனில் சிறந்து விளங்கி, தங்கள் பணிகளை செம்மையுற செய்வதற்கு ஏதுவாக அமையும் என்றாலும்; காவல் துறை பணி சிறப்புடன் விளங்க காவல் துறை நவீனமயமாக்குதல் மிகவும் இன்றியமையாதது ஆகும்.1991-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தான், தமிழகக் காவல் துறையை நவீனமயமாக்கும் பல்வேறு நடவடிக்கைகள் துவங்கப்பட்டன.

தமிழகக் காவல் துறைக்கு நவீன ஆயுதங்கள், தளவாடங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், அதிரடிப் படை பயிற்சி; வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் பிரிவு போன்ற புதிய பிரிவுகளை ஏற்படுத்துதல் என, பல்வேறு நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். இத்தகைய நடவடிக்கைகள் தான், காவல் துறைக்கு புதிய மாற்றத்தையும், அதன் காரணமாக சீர்மிகு ஏற்றத்தையும், அளித்து வருகிறது.

இன்றைக்கு நீங்கள் வெளிப்படுத்திக் காட்டியுள்ள இந்த மிகச் சிறந்த அணிவகுப்பானது, உங்களது திறமை, மேன்மையான நோக்கம், உடல் மற்றும் மனத்திடம், ஆகியவற்றின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. விடா முயற்சி; பணியின்பால் கடமையுணர்ச்சி; கண்ணியம்; நேர்மை ஆகிய நற்பண்புகளை கடைபிடிப்போம் என்று நீங்கள் இன்றைய தினம் எடுத்துள்ள உறுதிமொழியை கடைபிடித்து; தமிழ்நாடு காவல் துறையின் திறமையை மேலும் உயர்த்த நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்; உங்களது பணிக்காலத்தில், சீருடையின் கௌரவத்திற்கும், புகழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்; தமிழகக் காவல் துறையை உலகத்தின் தலை சிறந்த காவல் துறையாக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+