அண்ணா காலம் முதல் இன்று வரை சினிமாக்காரர்களின் அடிமையாக இருக்கிறது தமிழகம்-ராமதாஸ் தாக்கு

பாமக சார்பில் புதிதாக, புதிய அரசியல் புதிய நம்பிக்கை என்ற பெயரில் ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு அதை ஊர் ஊராக அக்கட்சித் தலைவர்கள் வெளியிட்டுப் பேசி வருகிறார்கள். இதன் கோவை வெளியீட்டில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திராவிட கட்சிகளில் ஆட்சி சீர்கேட்டில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை இந்த புத்தகத்தில் தொகுத்து வழங்கி உள்ளோம்.
இந்த புத்தகத்தை படித்தால் பா.ம.க. போன்று கொள்கை உடைய கட்சி வேறு ஏதும் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். திராவிட கட்சிகள் ஒளிமயமான எதிர்காலத்தை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தன. அந்த கட்சி ஆட்சியிலும், சரி, இந்த கட்சி ஆட்சியிலும் சரி தமிழக மக்களுக்கு 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை மின் வெட்டுதான் கிடைத்துள்ளது. இதனால் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறி விட்டது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின் வெட்டில் இருந்து விடுதலை கிடைக்கும் என சொல்லி அ.தி.மு.க. அம்மா சொன்னார்கள். இன்றைக்கு என்ன நிலைமை? கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின் தடை.
கிராமப் புறத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இருப்பதில்லை. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது தெரியவில்லை. கோவையில் உள்ள சிறு, குறுந் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் எந்த ஊரில் இருந்து வந்தாலும் அவர்களுக்கு வேலை கொடுக்கும் இடமாக கோவை, திருப்பூர் மாவட்டங்கள் விளங்கியது. கடுமையான மின் வெட்டு காரணமாக இங்குள்ள மக்களே வேலை கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டசபையில் கவர்னர் உரையில் தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதை நாம் நகைச்சுவையாக எடுத்து கொள்ள வேண்டும். தலைநகரான சென்னையில் தினமும் ஒரு கொலை நடக்கிறது. பெருங்குடியில் நடந்த வங்கி கொள்ளையில் கொள்ளையர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
தமிழகத்தில் பொறியியல் துறை, மருத்துவத்துறையாக இருந்தாலும் சரி. நுழைவுத் தேர்வு தேவையில்லாதது. நான் போராடியதன் பயனாக நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. உயர் படிப்புகளுக்கு கிராமப்புற மாணவர்களை நுழைய விடாமல் செய்வதே நுழைவு தேர்வின் முக்கிய பங்கு.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வுக்கு தகுதி தேர்வு அறிவித்து இருப்பது தேவையில்லாதது. தேர்வாணையம் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.
கூடங்குளம் அணு மின் நிலையம் மட்டுமல்ல. நாட்டிலே எந்த ஒரு அணுமின் நிலையமும் தேவையில்லை என்பது தான் எங்கள் கட்சியின் கொள்கை. அந்த வகையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தை கைவிட வேண்டும். மாற்றாக அனல் மின், புனல் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1967 - ல் இருந்து சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள். அண்ணா காலம் முதல் இதுதான் நிலைமை. இன்று சினிமா நடிகையாக இருந்தவர் முதல்ராக இருக்கிறார், நடிகராக இருந்தவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இந்தியாவில் வேறு எங்கும் இப்படி ஒரு அவல நிலை இல்லை. ஆந்திராவில் கூட இல்லை.
இதன் காரணமாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை சீர்கேட்டிற்கு இழுத்து சென்று விட்டது. திராவிட கட்சிகளை ஒழிப்பதே எங்கள் நோக்கம். இதை காலம் விட்ட கட்டளை என்று கூட சொல்லலாம். நிச்சயம் எங்களால் முடியும். மாறி, மாறி கூட்டணி வைத்தது தான் நான் செய்த பெரிய தவறு.
திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு கொடுத்தது மூன்றுதான். 1. குடி, 2. சினிமா மோகம், 3. இலவசம். சினிமாக்காரர்களை நம்பி தமிழகம் சீரழிந்தது போதும். தமிழகம் வளம் பெற சினிமா மோகத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும்.
செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் பணத்தை கொட்டினார்கள். செம்மொழியை வளர்த்தார்களா? என்றால் இல்லை. தமிழால் தங்களை வளர்த்துக் கொண்டார்கள்.
வைகோ கலைஞரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க.வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காக ம.தி.மு.க.வை தொடங்கினார். சில காலம் சீட்டுக்காக அந்த அம்மாவிடம் போய் நின்றார். அவர்கள் விரட்டி விட்டனர். இப்போது ஒன்றும் இல்லாமல் நிற்கிறார். அவரும் தமிழுக்காக ஒன்றும் செய்து விடவில்லை.
ரசிகர் மன்றம் வைத்தவர்கள் அதை கட்சியாக்கி தற்போது எதிர் கட்சி தலைவராக உள்ளார்கள். அவர்கள் கட்சி பெயர் கூட வாயில் நுழைவதில்லை.
தமிழகத்தில் யாருக்குமே ஒன்றும் தெரிவதில்லை. எனவே தான் மாவட்டந்தோறும் சென்று புதிய அரசியல் புதிய நம்பிக்கையை விதைத்து வருகிறோம். வரும் காலத்தில் தேசிய, திராவிட கட்சிகளை புறக்கணித்து சமுதாய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இதற்கு முன்பு திராவிட கட்சிகளுடன் நாங்கள் வைத்திருந்த கூட்டணி கொள்கையற்ற கூட்டணி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications