முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து பரஞ்ஜோதி நீக்கம்
திருச்சி: முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியிலிருந்து பரஞ்ஜோதி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அமைச்சர் சிவபதி புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்று தமிழக முதல்வரானார். இதயடுத்து தனது தொகுதியை கவனித்துக் கொள்ள முன்னாள் எம்.எல்.ஏ. பரஞ்ஜோதியை தொகுதி பொறுப்பாளராக நியமித்தார். இதனால் பரஞ்ஜோதிக்கு புது கவுரவம் கிடைத்தது.
அதன் பிறகு திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றி பெற்று அவர் எம்.எல்.ஏ. ஆனார். புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அவரை ஜெயலலிதா சட்ட அமைச்சராக்கினார். இதனால் அதிமுகவினர் மத்தியில் பரஞ்ஜோதிக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் கூட பொறாமைப்படும் அளவுக்கு அவருக்கு ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்புகள் தேடி வந்தன.
ஆனால் அவர் அமைச்சராக பதவியேற்ற 45 நாட்களுக்குள் பெண் டாக்டர் ராணி கொடுத்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து பரஞ்ஜோதியிடமிருந்து அமைச்சர் மற்றும் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவிகளை முதல்வர் ஜெயலலிதா பறித்தார்.
ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர் பதவியில் மட்டும் அவர் நீடித்து வந்தார். இந்த நிலையில் அந்த பதவியையும் ஜெயலிலதா பறித்துவிட்டார். இதையடு்தது ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
சசகிலா தம்பி திவாகரனோடு தொடர்பு இருந்ததாகக் கூறி இவர் ஏற்கனவே வகித்து வந்த கால்நடைத்துறை அமைச்சர் பதவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஜெயலலிதா பறித்தார். தற்போது அவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராக சிவபதி நியமிக்கப்பட்டுள்ளதால் கட்சியினர் இடையே அவரது மதிப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications