'என்கவுண்டர் பண்னிடப் போறாங்க'...மகனைக் காக்கக் கோரி தாய் மனு!
செங்கல்பட்டு: எனது மகனை என்கவுண்டர் என்ற பெயரில் போலீஸார் கொல்லத் திட்டமிட்டுள்ளனர். அதிலிருந்து எனது மகனை காப்பாற்ற வேண்டும் என்று கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் ஒரு பெண் மனு கொடுத்துள்ளார்.
செங்கல்பட்டு நகராட்சியின் துணை தலைவராக இருந்த ரவி பிரகாஷ் கடந்த மாதம் 17-ந்தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி பிரபல ரவுடியான பட்டரைவாக்கம் சிவா உள்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் பட்டரைவாக்கம் சிவா கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ளார். சிவா மீது 5 கொலை வழக்குகள், 5 கொலை முயற்சி வழக்குகள் ஆட்கள் கடத்தல் உள்பட 23 வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் வேளச்சேரி சம்பவம் போல தனது மகனையும் என்கவுண்டரில் போலீஸார் கொன்று விடுவார்களோ என்று சிவாவின் தாயாருக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு முதலாவது நீதித்துறை நடுவர் முன்பு ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் தனது மகனை போலீஸார் என்கவுண்டரில் கொன்று விடுவார்களோ என அஞ்சுவதாகவும், தனது மகன் உயிரைக் காப்பாற்றும்படியும் கோரியிருந்தார் சிவாவின் தாயார்.
இதையடுத்து மாஜிஸ்திரேட், மாவட்ட எஸ்.பி., செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications