15 நாட்களுக்குள் கூடங்குளத்தில் மின்உற்பத்தி துவங்கும், மாதம் ரூ.750 கோடி இழப்பு: நாராயணசாமி
புதுச்சேரி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்னும் 15 நாட்களுக்குள் மின்உற்பத்தி துவங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தால் மாதந்தோறும் ரூ. 750 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
தமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு நிலவி வருகின்றது. தற்போது தேர்வு நேரம் என்பதால் இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக மாணவ-மாணவியரால் படிக்க முடியவில்லை. மேலும் விவசாயிகள் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சார மோட்டர்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக சென்னை, மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அணுஉலைகளில் ஒன்றில் 99 சதவீதம் வேலைகளும், இன்னொருஉலையில் 95 சதவீதம் வேலைகளும் முடிவடைந்துள்ளன. எனவே 2 அணுஉலைகளும் தமிழக அரசின் ஒத்துழைப்புடன் இன்னும் 15 நாட்களுக்குள் இயக்கப்படும். இதன்மூலம் கிடைக்கும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு 1000 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். அதனால் தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை குறையும்.
தற்போது கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கவிடாமல் மத்திய அரசுக்கு எதிராக தேசவிரோத சக்திகள் போராட்டம் நடத்துகின்றன. இதனால் மத்திய அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.750 கோடி இழப்பு ஏற்பட்டு வருகின்றது. இதற்கு போராட்டக்காரர்கள் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக 11 போராட்டக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. போராட்டக் குழுக்களுக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களின் மூலம் நிதி வருகிறது. போராட்டக்காரர்களுக்கு பணம் வரும் இடம் குறித்து உள்துறை அமைச்சகம் கண்டறிந்து உள்ளது. இது குறித்து 6 போராட்டக் குழுவினரிடம் விசாரணை நடைப்பெற்றது.
இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏன்? கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. சுனாமியே வந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர்.
மூத்த அணுசக்தி விஞ்ஞானியான நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் சென்று பார்வையிட்டு அணு உலைகள் மிகவும் பாதுகாப்பானது. நமது மின்சார தேவையை ஈடு செய்ய அந்த அணு உலைகளால் மட்டுமே முடியும் என்று கூறிய பிறகும் போராட்டங்களை நடத்தி வருவது ஏன்? அந்த அணு உலையை இயங்க செய்யாமல் தேவையற்ற போராட்டங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நாளை நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications