சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரி திடீர் மாற்றம்
திருநெல்வேலி: சங்கரன்கோவில் தொகுதி தேர்தல் அதிகாரிகளில் ஒருவரான கலால்துறை உதவி ஆணையர் செல்வராஜ் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியாக ஆட்சியர் இரா.செல்வராஜ் செயல்பட்டு வருகிறார்.
தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலால் துறை உதவி ஆணையாளர் செல்வராஜூம், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக சங்கரன்கோவில் தாசில்தார் தாமோதரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்பு மனுக்கள் பெறுதல், பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
திடீர் விடுவிப்பு
இந்தநிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜ் நேற்று அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நதிநீர் இணைப்பு திட்ட நில எடுப்பு உதவி ஆட்சியர் பரமசிவன், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் நேற்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியர்
இரா.செல்வராஜூடன் ஆலோசனை நடத்தினார்.
மாற்றம் ஏன்?
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தேர்தல் விதிமுறைகளின்படி தேர்தலை நடத்தும் அதிகாரி அடுத்த 6 மாதங்களுக்கு அதே பொறுப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் தொடர்பான வழக்குகள், பிரச்சினைகள் மற்றும் பணிகளை எதிர்கொண்டு செயல்படுத்த முடியும். ஆனால் கலால் உதவி ஆணையர் செல்வராஜ் அடுத்த மாதம் ஓய்வு பெற இருக்கிறார் என்பதால் வேறு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்'' என்றனர். .












Click it and Unblock the Notifications