மர்ம முடிச்சாக நீளும் மீன் வளம் நிறைந்த கச்சத்தீவு!

Subscribe to Oneindia Tamil

கச்சத்தீவு: இந்தியாவால் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டே தீருவேன் என்று முதல்வர் ஜெயலலிதா சபதமிட்டு வரும் நிலையில், அப்படி ஒரு திட்டமே இந்திய அரசிடம் இல்லை என்ற பின்னணியில், இது உண்மையில் சாத்தியம்தானா, அதற்கான சூழல்கள் அங்கு உள்ளது, அங்கு என்னதான் நிலை நிலவுகிறது என்பதை அலசுகிறது இந்த செய்திக் கட்டுரை.

தமிழர்களின் உரிமைத்தீவு என கூறப்படும் கச்சத்தீவு, கடந்த காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குச் சொந்தமான ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்துள்ளது. இதற்கு அதன் சமஸ்தான ஆவணக் காப்பகத்தில் நிறைய ஆவணங்கள் சாட்சி உள்ளது.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜலசந்தியில் ராமேஸ்வரதிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் கச்சத்தீவு உள்ளது. கச்சத்தீவு இலங்கையின் வட கிழக்கில் உள்ள யாழ்ப்பாண தீபகற்பத்தினை ஒட்டியுள்ள சிறு சிறு தீவுக் கூட்டங்களிலிருந்து சிறிது விலகி, ராமேஸ்வரத்திற்கு அருகே உள்ளது.

ராமநாதபுரத்துக் கடலோர மீனவர்களும், புதுக்கோட்டை, நாகைப் பகுதி கடலோர மீனவர்களும் காலங்காலமாகக் கச்சத்தீவை ஒட்டி உள்ள கடற்பகுதியில் தான் மீன் பிடித்தும் கச்சத்தீவை வலைகளை உலர்ததவும் ஓய்வு எடுத்துக் கொள்ளவும் பயன்படுத்தி வருந்துள்ளனர். இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகவே கச்சத்தீவு காலம் காலமாக இருந்து வந்துள்ளது.

கடந்த 1974 ம் வருடம் இந்திய பிரதமர் இந்திராகாந்தியும், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும் அதிகாரத்தில் இருந்த போது, ஜூன் 28ம் தேதி கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. இப்படித்தான் தமிழக மீனவர்களின் வாழ்வில் வசந்தமாக இருந்து வந்த கச்சத்தீவு, வாரிக் கொடுக்கப்பட்டது இலங்கையிடம்.

அதன் பின்னர் கச்சத்தீவு பக்கம் போகக் கூட முடியவில்லை நமது மீனவர்களால். கச்சத்தீவு வெறும் மணல்வெளி என்றும், அங்கு அந்தோனியாருக்கு ஓர் ஆலயம் மட்டுமே உள்ளதாகவும், அதுவும் கூட வருடத்தற்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவுக்குத் தான் தமிழ் நாட்டில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் வந்து செல்கின்றனர் என்றும், மற்றபடி கச்சத்தீவுக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை என்றும் இலங்கை தரப்பில் மீண்டும் மீண்டும் கூறப்படும் வாதமாக உள்ளது.

கச்சத்தீவு குறித்த கடல் எல்லை ஆதிக்க ஒப்பந்தத்தின் ஐந்தாவது விதியில், இந்தியாவில் இருந்து கச்சத்தீவுக்குத் மக்கள் தொடர்ந்து தங்கு தடையின்றிச் சென்று வரலாம் என்றும் கச்சத்தீவுக்குச் செல்ல பாஸ்போர்ட்டோ இலங்கையின் விசாவோ தேவையில்லை என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதே போல, ஆறாவது விதியில், தமிழக மீனவர்கள் கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தொடர்ந்து அனுபவித்து வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளுக்கு உடன்பட்டுத் தான் கச்சத் தீவை இலங்கை தனது கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக ஏற்றுக் கொண்டது.

கச்சத்தீவு கடல் எல்லை ஒப்பந்தம் கையெழுத்தான சமயம் அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங், கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையைத் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதற்கு ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்று மக்களவையில் கூறியுள்ளார்.

1983 வரை தமிழக மீனவர்களுக்கு கச்சத்தீவு கசக்கவில்லை. ஆனால் இலங்கை கடல் பகுதியில், விடுதலைப் புலிகள் கரம் வலுத்த வேளையில், அதையே காரணம் காட்டி இலங்கை அரசு கச்சத்தீவை ஒட்டியுள்ள கடலில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு தடை போட்டது.

அது முதல் கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கப் பாரம்பரிய உரிமையுடன் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஈவு இரக்கமின்றித் தாக்கப்படுவதும், படகுகளை சேதப்படுத்துவதும், பிடித்த மீன்களை தூக்கி எறிவதையும், மீன்பிடி வலைகளையும் அறுத்து எரிவதும், உச்சகட்டமாக மீனவர்களை படுகொலை செய்வதும் என தொடர்ந்து அராஜகங்கள் அரங்கேறி வருகின்றன.

ராமேஸ்வரத்திற்குக் கிழக்கே கடலில் ஒன்பது கிலோ மீட்டர் வரை பாறைகள் தான் அதிகமாக உள்ளது. அதன் பிறகு 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலங்கையின் கடல் எல்லை வந்து விடுகிறது. எனவே, அந்த பகுதியில் மீன் பிடிக்க முடியாத சூழல் உள்ளது என தமிழக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கச்சத்தீவுக்காக நமது மீனவர்கள் போராடுவதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால் அப்பகுதி நமது பாரம்பரிய பகுதி என்பது மட்டுமல்லாமல் அங்குதான் மீனவளம் நன்றாக உள்ளது என்பதே. குறி்ப்பாக கச்சத்தீவை ஒட்டி உள்ள கடல் பகுதிகளில் டைகர் ப்ரான் எனப்படும் அரிய வகை இறால் அதிக அளவு கிடைக்கிறது. இதற்கு சர்வதேச சந்தையில் அதிக கிராக்கி உள்ளது.

இதை நம்பித்தான் நமது மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. ஆனால் இதைக் கைப்பற்ற இலங்கை மீனவர்கள் மும்முரமாக உள்ளனர். மேலும், இந்தப் பகுதியை தமிழக மீனவர்கள் மூலம் இந்தியா சொந்தம் கொண்டாடி மீண்டும் வந்து விடக்கூடாது என்ற அச்சம் இலங்கையிடம் உள்ளது. இதனால்தான் கச்சத்தீவு பக்கம் தமிழக மீனவர்கள் வருவதை இலங்கை விரும்பாமல் தொடர்ந்து தாக்கி வருகிறது.

ஆனால் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையான கச்சத்தீவை மீண்டும் மீட்பேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால் மத்திய அரசோ அப்படி ஒரு சிந்தனையிலேயே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் ஒரு முடிந்து போன விஷயம் என்றும் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது, அதைத் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்றும் கூறிவிட்டார்.

அந்தோணியார் கோவில் திருவிழாவுக்காக மட்டும் தமிழக மீனவர்களை அனுமதிப்பது, மற்ற காலங்களில் சுட்டு விரட்டுவது, தாக்கி அடிப்பது, குண்டு வீசுவது, கல்வீசுவது என்று இலங்கையின் காட்டுமிராண்டித்தனம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

மர்ம முடிச்சாக நீளும் கச்சத்தீவு விவகாரம் என்று நமது மீனவர்களுக்கு நி்ம்மதி அளிக்கப் போகிறது என்பது மட்டும் புரியாத புதிராகவே உள்ளது.

கட்டுரை மற்றும் படங்கள்: கே.என்.வடிவேல், செய்தியாளர், தட்ஸ்தமிழ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+