4வது முறையாக உ.பி. முதல்வராகிறார் சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ்

Subscribe to Oneindia Tamil

Mulayam Singh Yadav
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக பதவியேற்கவுள்ளார் சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.

நேதாஜி என்று சமாஜ்வாடி கட்சித் தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் முலாயம் சிங். உ.பி.யின் அசைக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு தலைவர் முலாயம் சிங் யாதவ் என்பதை அம்மாநில சட்டசபைத் தேர்தல் மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

ஆரம்பத்தில் காங்கிரஸில் ஈடுபட்டு, பின்னர் ஜனதாதளத்தில் இணைந்து, பிறகு அதிலிருந்து வெளி வந்து சமாஜ்வாடிக் கட்சியைத் தொடங்கி இன்று வரை உ.பி. அரசியலின் முக்கிய அரசியல் நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் முலாயம் சிங்.

1989ம் ஆண்டு முதல் முறையாக உ.பி. முதல்வராக பதவியேற்றார் முலாயம் சிங் யாதவ். அப்போது அவர் ஜனதாதளத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில், மத்தியில் ஆட்சியில் இருந்து வந்த வி.பி.சிங் அரசு 1990ம் ஆண்டு கவிழ்ந்தது. சந்திரசேகர் தலைமையில் ஜனதாதளம் உடைந்து சந்திரசேகர் தலைமையிலான சோசலிச ஜனதாதளம் ஆட்சியமைத்தது. முலாயமும் சந்திரசேகர் கட்சியில் இணைந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வர் பதவியில் தொடர்ந்தார்.

ஆனால், 1991ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முலாயம் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றது. இதனால் முலாயம் ஆட்சி கவிழ்ந்தது. மத்தியிலும் சந்திரசேகர் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு வாபஸாகி அவரும் கவிழ்ந்தார்.

1991ல் உ.பி சட்டசபைக்கு இடைத் தேர்தல் நடந்தது. அதில் முலாயம் கட்சி தோல்வி அடைந்து பாஜகவிடம் ஆட்சியைப் பறி கொடுத்தது.

அதன் பின்னர் 1992ம் ஆண்டு ஜனதாதளத்திலிருந்து விலகினார் முலாயம். சமாஜ்வாடிக் கட்சியைத் தொடங்கினார். 1993ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்தித்தார். இதனால் அத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.

அப்போது முலாயம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸின் உதவியுடன் முலாயம் சிங் யாதவ் 2வது முறையாக முதல்வராக அமர்ந்தார். ஜனதாதளமும் அவருக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால் இந்த ஆட்சி 1995ல கவிழ்ந்தது.

அதன் பின்னர் 1996ம் ஆண்டு அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியானார். மத்தியில் ஆட்சியமைத்த ஐக்கிய முன்னணி அரசில் இணைந்து பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால் மத்திய கூட்டணி அரசு 1998ல் கவிழ்ந்தது. இதையடுத்து வந்த இடைத் தேர்தலில் சம்பல் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பியானார். ஆனால் 1999ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. அதன் பின்னர் மத்தியில் ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்றபோது முலாயம் காங்கிரஸுக்கு ஆதரவு தரவில்லை.

1999ல் கன்னோஜ் மற்றும் சம்பல் என இரு எம்.பி. தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின்னர் கன்னோஜ் தொகுதியை ராஜினாமா செய்தார். அங்கு அவரது மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2002ம் ஆண்டு உ.பியில் மாயாவதியும், பாஜகவும் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தன. ஒன்றரை வருடமே நீடித்த இந்தக் கூட்டணி 2003ல் முடிவுக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி உடைந்து முலாயம் சிங் யாதவுக்கு ஆதரவாகத் திரும்பினர். இதையடுத்து முலாயம் 3வது முறையாக ஆட்சியமைத்து முதல்வரானார். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவும், மறைமுகமாக முலாயமுக்கு ஆதரவு கொடுத்ததாக அப்போது பேச்சு இருந்தது. அதாவது மாயாவதியைப் பழிவாங்க முலாயமுக்கு பாஜக மறைமுகமாக ஆதரவு கொடுத்தது.

முதல்வர் பதவியேற்றதும் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முலாயம், 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குன்னார் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றார். பதிவான வாக்குகளில் 92 சதவீதத்தை முலாயம் பெற்றார்.

பின்னர் 2004ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்தபடியே லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். மைன்புரி தொகுதியில் வெற்றியும் பெற்றார். இருப்பினும் அவரை காங்கிரஸ் கட்சி உதாசீனப்படுத்தியதாலும், தனது கட்சியின் ஆதரவு காங்கிரஸுக்குத் தேவைப்படாத காரணத்தாலும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு முதல்வராகவே தொடர்ந்தார்.

2007ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. முலாயம் சிங்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

தற்போது 4வது முறையாக உ.பி முதல்வராகிறார் முலாயம் சிங் யாதவ். தற்போதும் இவர் மைன்புரி எம்.பியாக இருக்கிறார். முதல்வர் பதவியேற்க வசதியாக விரைவில் தனது எம்.பி பதவியை அவர் ராஜினாமா செய்யவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+