கொலைகார இத்தாலியர்களுக்கு சலுகையா?: உம்மன்சாண்டி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைதாகியுள்ள இத்தாலியர்களிடம் கேரள காங்கிரஸ் அரசு சலுகை காட்டுகிறது என்ற குற்றச்சாட்டை அம் மாநில முதல்வர் உம்மன் சாண்டி நிராகரித்துள்ளார்.

மீனவர்கள் இருவர் சமீபத்தில் கொல்லம் கடற்பகுதியில் இத்தாலியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை கேரள சட்டப் பேரவையில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது.

எதிர்க்கட்சிகள் புகார்

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்தாலியர்களை ஏதோ விருந்தாளிகளைப் போல் காங்கிரஸ் அரசு நடத்துகிறது. முக்கியமான வழக்கில் அவர்கள் எதிரிகள் என்பதை மறந்துவிட்டு மாநில அரசு செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் மூத்தத் தலைவர் பி.கே. குருதாஸன் குற்றம்சுமத்தினார்.

கைது செய்யப்பட்டுள்ள இத்தாலியர்களிடம் மாநில அரசு மென்மையாக நடந்து கொள்கிறது. அவர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் வசதியை மாநில அரசு செய்து கொடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வலியுறுத்தினார்.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் கோரிக்கையை அவைத் தலைவர் கார்த்திகேயன் ஏற்கவில்லை. அவையில் அமைதி காக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தினார்.

உம்மன் சாண்டி விளக்கம்

இதனிடையே, தனது இருக்கையைவிட்டு எழுந்த முதல்வர் உம்மன் சாண்டி, மார்க்சிஸ்ட் உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக உம்மன் சாண்டி கூறியதாவது:

மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இத்தாலிய அரசு தரப்பு வாதத்தை மாநில அரசு ஏற்கவில்லை. இந்திய சட்டத்தின்படிதான் வழக்கு விசாரணை நடைபெறும் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டோம். இதையே மத்திய அரசும் கூறியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இத்தாலியர்களுக்கு எதிர்க்கட்சியினர் சொல்வதுபோல் எவ்வித சலுகையையும் அரசு காட்டவில்லை. அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இதில் சந்தேகம் தேவையில்லை.

2008-ல் மாநிலத்தில் இடதுசாரி ஆட்சியின் போது கண்ணூர் கடல் பகுதியில் இந்திய மீனவப் படகு மீது சீன கப்பல் மோதியது. இதில் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தை இடதுசாரி அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. ரூ.25 லட்சத்தை மட்டும் செலுத்தச் சொல்லிவிட்டு சீன கப்பலை அனுப்பிவிட்டது. இதுபோன்ற நிலை காங்கிரஸ் தலைமையிலான அரசில் நடக்காது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி பெற்றுத்தரப்படும். இதற்காக வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன என்றார்.

வெளிநடப்பு

உம்மன் சாண்டியின் கருத்துக்கு இடதுசாரி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். மேலும் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+