சாதனைக்காக உயிருடன் குழிக்குள் புதைக்கப்பட்ட இலங்கை போலீஸ் சாவு
கொழும்பு: தொடர்ந்து பல மணி நேரம் குழி்ககுள் இருந்து சாதனை படைக்க முயன்ற இலங்கை போலீஸ்காரர் ஒருவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.
இலங்கை தலைநகர் கொழும்பு அருகேயுள்ள கந்தலே நகரைச் சேர்ந்தவர் ஜனகா பஸ்நாயகே (24). அவர் உள்நாட்டு பாதுகாப்பு படையில் காவலராக இருந்தார். நீண்ட நேரம் மண்ணில் புதைந்து புதிய சாதனை நிகழ்த்த விரும்பினார். இதையடுத்து இந்த சாதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சுமார் 10 அடி ஆழக் குழியில் அவரை உட்கார வைத்து மரப்பலகையை வைத்து அதன் மேல் மண்ணைப் போட்டு மூடினர். அவர் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து ஆறரை மணி நேரம் அந்த குழிக்குள் உட்கார்ந்திருந்தார். மாலை 4 மணிக்கு மணலை அகற்றி மரப்பலகையை எடுத்துப் பார்த்தபோது அவர் குழிக்குள் மயக்க நிலையில் இருந்தார்.
உடனே அவரை சிகிச்சைக்காக கந்தலேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூச்சு திணறி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதைக் கேட்ட அவரது தாய் லீலாவதி உள்பட அங்கு கூடியிருந்தவர்கள் கண்ணீர் வடித்தனர். ஜனகர் ஏற்கனவே இரண்டரை மற்றும் 6 மணி நேரம் குழிக்குள் இருந்து சாதனை படைத்துள்ளார். இம்முறை தனது முந்தைய சாதனையை முறியடிக்க நினைத்த அவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்தார்.












Click it and Unblock the Notifications