போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: 4 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கம்
டெல்லி: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்காக வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் 4 தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் 7 தொண்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்திற்கு பல வெளிநாட்டு அமைப்புகள் பண உதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகளை மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சகம் கண்காணித்தது.
இதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்று செயல்படும் 16 தொண்டு நிறுவனங்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட அமைப்பு, கிராம வளர்ச்சி மையம், குட்விஷன் அறக்கட்டளை, கிராம மற்றும் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை ஆகிய தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை முறையாக செலவு செய்யாதது தெரிய வந்தது.
இதனையடுத்து 4 தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதி பெறும் உரிமம் ரத்து செய்யப்பட்டு, வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 4 நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் ரூ.36 கோடியே 37 லட்சம் பணம் வந்துள்ளது.
4 நிறுவனங்களிடமும் வெளிநாட்டு நிதியை செலவு செய்தது குறித்து விளக்கம் கேட்டு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் 7 தொண்டு நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதேபோல கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளரான உதயகுமார் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு சுவீடனில் இருந்து பணம் வந்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அமைப்பு ஒன்று ரூ.20 கோடியே 1 லட்சமும், கிராம மையம் ரூ.13 கோடியே 4 லட்சமும் வெளிநாட்டில் இருந்து பெற்றுள்ளன.
இது குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகின்றது. குட்விஷன் அறக்கட்டளை ரூ.1.24 கோடியும், கிராம மற்றும் கல்வி வளர்ச்சி அமைப்பு ரூ.1.63 கோடியும் வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளன. இது குறித்து விசாரிக்கும் பொறுப்பு தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் சுவீடன் நாட்டில் இருந்து ரூ.30.1 லட்சம் நிதி பெற்றுள்ள 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மதுரையில் செயல்பட்டு வரும் 2 தொண்டு நிறுவனங்களும் கூடங்குளம் போராட்டத்துக்கு உதவியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்கு, வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதி, நிறுவன பணிகள், அசையா சொத்துக்கள், 2006 முதல் இதுவரை செய்துள்ள வரவு-செலவு ஆவணங்கள் ஆகியவை குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications