இன்று வெளியாகிறது பாலச்சந்திரன் படுகொலை வீடியோ- தண்டிக்கப்படுமா இலங்கை?

கடந்த 2011ம் ஆண்டு சேனல் 4 நிறுவனம் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நடுங்க வைக்கும் வீடியோ ஆவணப்படத்தை வெளியிட்டது.
'Sri Lanka's Killing Fields' என்ற பெயரில் வெளியான அந்தப் படத்தில், ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது இலங்கைப் படையினர் நடத்திய கொடூர போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த காட்சிகள், பேட்டிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், தற்போது 'Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished' என்ற பெயரில் இன்னொரு ஆவணப்படத்தை இன்று வெளியிடுகிறது சேனல் 4 நிறுவனம். முந்தைய படத்தின் தொடர்ச்சியாக இது வெளியாகிறது. இதில், பல்வேறு சாட்சிகளின் வாக்குமூலங்கள், புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இறுதிக் கட்டப் போரின்போது நடந்த கொடூரங்களை விளக்குவதாக இது அமையும் என்று சேனல் 4 நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சேனல் 4 நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், முக்கியமான நான்கு விஷயங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. அவை யாவன...
1. பாதுகாப்பு வளையப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்து தஞ்சமடைந்த அப்பாவி மக்களை வேண்டும் என்றே இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்று குவித்த விவகாரம். மேலும் ஒரு மருத்துவமனையை குண்டு வீசித் தாக்கிய சம்பவம் குறித்த விசாரணை மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள்.
2. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கிய ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களுக்கு வேண்டும் என்றே உணவு, மருந்துகள் கிடைக்கச் செய்யாமல் அவர்களை பலியாக விட்ட செயல். இதன் மூலம் சர்வதேச மனித உரிமை சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
3. மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் ஈடுபட்ட இலங்கைப் படையினர், அப்பாவி மக்களை கொடூரமாக தாக்கி கொன்றுள்ளனர். இதுதொடர்பான வாக்குமூலங்கள்.
4. சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை நிர்வாணப்படுத்தி, சித்திரவதை செய்து திட்டமிட்டு படுகொலை செய்தது. இதில் 12 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. (இந்த சிறுவன்தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன்)
மிகுந்த மன வலியைக் கொடுத்துள்ள இந்த விசாரணைகள் மனித சமூகத்தின் முன்பு பல கேள்விகளை எழுப்பும் என்று நம்புகிறோம். மேலும், அதிபர் ராஜபக்சே, அவரது சகோதரரும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சே ஆகிய இருவரும் இந்த சம்பவங்களுக்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நம்புகிறோம் என்று சேனல் 4 தெரிவித்துள்ளது.
லண்டன் நேரப்படி இன்று இரவு 10.55 மணிக்கு இந்த பதைபதைப்பூட்டும் வீடியோ ஆவணப்படம் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.












Click it and Unblock the Notifications