லிங்காயத்து-ஒக்கலிகா ஜாதி மோதலாக உருவெடுத்த எதியூரப்பா பிரச்சனை!: குழப்பத்தில் பாஜக தலைமை

அவருக்கு சுமார் 60 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து வருவதால், என்ன செய்வது என்று தெரியாமல் பாஜக தலைமை கையைப் பிசைந்து கொண்டுள்ளது.
இன்று கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்க உள்ள நிலையில், முதல்வர் சதானந்த கெளடா பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது. நான் தான் பட்ஜெட் தாக்கல் செய்வேன். அதற்குள் என்னை முதல்வராக்க வேண்டும் என எதியூரப்பா கட்சித் தலைமைக்கு கெடு விதித்தார்.
நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலையில் இன்று காலையுடன் அந்த கெடு முடிவடைந்தது.
இதையடுத்து எதியூரப்பாவை அமைதியாக்கிவிட பாஜக தலைவர் நிதின் கட்காரி எடுத்த நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. எதியூரப்பாவை ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூருக்கு வரவழைத்து மோகன் பகவத்தை விட்டு மிரட்டலாம் என கட்காரி நினைத்தார். ஆனால், நாக்பூருக்கு வர மறுத்துவிட்ட எதியூரப்பா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தொடர்ந்து பெங்களூர் கோல்டன் பாம் ரிசார்ட்டிலேயே தங்கியுள்ளார்.
இதையடுத்து சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் கர்நாடக பாஜக தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனால், அவர்களை சந்தித்த எதியூரப்பா ஆதரவு 10 எம்பிக்களும் தங்களது தலைவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று கூறிவிட்டு வந்துவிட்டனர்.
வழக்கமாக உலகின் எல்லா விவகாரங்களுக்கும், மற்ற கட்சி விவகாரங்கள் உள்பட, ரொம்பவே பேசும் அருண் ஜேட்லி இந்த விவகாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைதி காத்து வருகிறார். ஆங்கில சேனல்களில் தானே வலிய வந்து கருத்து சொல்லும் இவரை சில நாட்களாக டிவியில் பார்க்கவே முடியவில்லை.
இந் நிலையில், எதியூரப்பா ஆதரவு எம்எல்ஏக்களை உடைக்கும் வேலையை மாநிலத் தலைவர் ஈஸ்வரப்பா, முதல்வர் சதானந்த கெளடா ஆகியோர் உதவியோடு பாஜக தலைமை ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் எதியூரப்பாவை பலமிழக்க வைக்கலாம் என நினைக்கிறது.
நேற்று ராஜ்யசபா எம்பி தேர்தலில் தனது ஆதரவாளரான புட்டசாமியை மனு தாக்கல் செய்ய வைத்து தலைமைக்கு இன்னொரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார் எதியூரப்பா. அவருக்கு ஆதரவாக 10 எம்எல்ஏக்கள் கையெழுத்துப் போட்டனர். இதையடுத்து புட்டசாமியை கட்சியை விட்டு நீக்கிய பாஜக, 10 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் இவர்களுக்குத் தலைவரான அமைச்சர் லிம்பாவலியுடன் பேச்சும் நடத்தியது. இதையடுத்து 10 பாஜக எம்எல்ஏக்களும் புட்டசாமிக்கு தந்த ஆதரவை வாபஸ் பெற்று எதியூரப்பாவுக்கு அதிர்ச்சி தந்துள்ளனர். இவர்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இதனால் எதியூரப்பாவின் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது.
ஆனாலும் அவருடன் இன்னும் 50 முதல் 60 பேர் வரை உள்ளனர். இந் நிலையில் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் இன்று எதியூரப்பா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதே நேரத்தில் போக்குவரத்து, உள்துறை அமைச்சரான அசோக் தலைமையில் ஒரு கோஷ்டி தனியே ஆலோசனை நடத்தி வருகிறது. பெங்களூர் நகர பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் அசோக் கோஷ்டியில் உள்ளனர்.
இதற்கிடையே சதானந்த கெளடாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கூடாது என்று அவர் சார்ந்த ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்த மடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, இவர்களது ஆதரவாளர்கள் போராட்டங்களையும் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
அதே நேரத்தில் எதியூரப்பாவை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்று அவர் சார்ந்த லிங்காயத்து சமுதாயத்தைச் சேர்ந்த வீரசைவ பிரிவு மடாதிபதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். எதியூரப்பாவுக்காக வீரசைவ பிரிவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்மூலம் எதியூரப்பா விவகாரம் கர்நாடகத்தின் மிக முக்கிய ஜாதிப் பிரிவுகளான ஒக்கலிகா, லிங்காயத்துகள் இடையிலான பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இந்த ஜாதி சண்டைக்கு பாஜக தலைமையின் நடவடிக்கைகளே காரணம் என்று நடுநிலையாளர்கள் புகார் கூறுகின்றனர்.
கர்நாடகத்தில் ஒக்கலிகா பிரிவினர் சுமார் 15 சதவீதமும், லிங்காயத்துகள் சுமார் 18 சதவீதமும் உள்ளனர். பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்களை ஒருங்கிணைக்க கர்நாடகத்தில் உருப்படியான தலைவர்கள் யாரும் இல்லை என்பதால், பெரும்பாலும் இந்த இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே முதல்வராகி வருகின்றனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த இரு ஜாதியினரையும் தனது மதக் குடைக்குள் கொண்டு வந்தது பாஜக. இதன்மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால், இப்போது இந்த இரு சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ள பிளவு, பாஜகவின் ஓட்டு வங்கிக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் சதானந்த கெளடாவை நீக்கினால் ஒக்கலிகா சமுதாயத்தினரும், எதியூரப்பாவை நீக்கினால் லிங்காயத்து சமூகத்தினரும் பாஜகவுக்கு எதிராக அணி திரளும் நிலை உள்ளது. இதனால் எதியூரப்பா விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் பாஜக தலைமை உள்ளது.
தலைமையின் இந்த பலவீனமான நிலையை எதியூரப்பா தனது வசதிக்கு பயன்படுத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications