சோனியா காங். தலைவராகி 14 ஆண்டுகள் நிறைவு!

ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு சோனியா காந்தி கிட்டத்தட்ட அரசியலை விட்டு ஒதுங்கி விட்டார். பின்னர் நரசிம்ம ராவ் காங்கிரஸ் தலைவரானார், பிரதமரானார். அவருக்குப் பிறகு சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவரானார்.
ஆனால் 1996 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் சீதாராம் கேசரிக்கு எதிராக மாதவராவ் சிந்தியா, மமதா பானர்ஜி, அர்ஜூன் சிங், என்டி திவாரி, மூப்பனார், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். காங்கிரஸ் பல துண்டுகளாக உடைந்தது.
இதையடுத்து கேசரி பதவியிலிருந்து விலகினார்.அதன் பின்னர் சோனியா காந்தியால் மட்டுமே காங்கிரஸைக் காப்பாற்ற முடியும். நேரு-இந்திரா காந்தி பாரம்பரியத்தைக் காக்க சோனியா முன்வர வேண்டும் என கட்சித் தலைவர்கள் சோனியாவை வலியுறுத்தினர்.
இதையடுத்து கட்சியைக் காப்பாற்ற சோனியா காந்தி 1997ல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து 1998ம் ஆண்டு அவர் காங்கிரஸ் தலைவரானார். அன்று முதல் இன்று வரை அவர் தலைவர் பதவியில் நீடித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவராகி 14 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் 2 முறை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்திய பெருமை அவருக்கு உண்டு.
1999ம் ஆண்டு மே மாதம் சோனியா காந்திக்கு எதிராக சரத் பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோர் திடீர் போர்க்கொடி உயர்த்தினர். வெளிநாட்டில் பிறந்தவரான சோனியா பிரதமர் பதவிக்கு வரக் கூடாது என்று அவர்கள் குரல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்துவிலகுவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு பெருமளவில் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பவார் உள்ளிட்ட மூன்று பேரும் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தனர்.
காங்கிஸ் தலைவரான பிறகு தேர்தலில் முதல் முறையாக போட்டியி்ட்டார் சோனியா. தனது கணவர் ராஜீவ் காந்தியின் தொகுதியான அமேதியிலும், கர்நாடக மாநிலம் பெல்லாரியிலும் 1999ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டார் சோனியா. இரு தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றார். பெல்லாரியில் பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜை தோற்கடித்தார்.
2004 தேர்தலிலும், 2009 தேர்தலிலும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 14 வருட கால காங்கிரஸ் தலைவர் பதவிக்காலத்தில் பல சவால்களை, பூசல்களை, பிரச்சினைகளை சந்தித்து வந்த சோனியா, ஈழப் பிரச்சினையில்தான் பெரும் அவப்பெயரை சந்திக்க நேர்ந்தது. அவரது மாமியாரான இந்திரா காந்திக்கு ஈழத் தமிழர்கள் மத்தியில் எந்த அளவுக்கு நல்ல பெயர் உள்ளதோ அதற்கு நேர் மாறாக அதை விட இரண்டு மடங்கு அவப் பெயரை சோனியா காந்தி சந்தித்தார்.
இந்த நிலையில் கட்சித் தலைவராகி 14 வருடங்கள் பூர்த்தி செய்துள்ள சோனியாவை டெல்லி முதல்வரும், சோனியாவுக்கு நெருக்கமானவருமான ஷீலா தீட்சித் பாராட்டி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சியின் சந்தேஷ் பத்திரிக்கையில் எழுதியுள்ள கட்டுரையில்,
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இந்த சாதனையை சோனியா நிகழ்த்தியுள்ளார். அதுவும் வேறொரு கலாசாரம் மற்றும் மொழி பின்புலத்திலிருந்து வந்து இதை நிகழ்த்தியுள்ளார். அதற்கு சோனியாவின் விடாப்பிடித் தன்மையும், மன உறுதியுமே காரணம் என்று கூறியுள்ளார் ஷீலா.












Click it and Unblock the Notifications