மின் கட்டண உயர்வு ரூ.7,874 கோடி; குறைத்தது ரூ.740 கோடி மட்டுமே- கருணாநிதி

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப் பேரவையில் உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் அதிமுக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட வரலாறு காணாத மின் கட்டண உயர்வுகள் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதிப்பதற்கு ஒத்திவைப்புத் தீர்மானங்களைப் பேரவைத் தலைவரிடம் கொடுத்திருந்தனர். கேள்வி நேரம் முடிந்ததும் மின் கட்டண உயர்வு குறித்து ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொடுத்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எழுந்து நின்று அதைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பினைக் கேட்டபோது, பேரவைத் தலைவர் அதற்கான அனுமதியை வழங்காமல், முதலமைச்சர் ஜெயலலிதாவை 110வது விதியின் கீழ் அதே மின் கட்டண பிரச்சினை பற்றிய அறிக்கையைப் படிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.
முதலமைச்சரோ, அமைச்சர்களோ 110வது விதியின் கீழ் ஓர் அறிக்கையை அவையிலே வைக்க விரும்பும்போது, அதே பிரச்சனை குறித்து ஒத்திவைப்போ, கவன ஈர்ப்போ கொடுக்கப்பட்டிருந்தால், அதைக் கொடுத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களைப் பேச செய்து, அதற்கு முதல்வரோ, அமைச்சர்களோ தாங்கள் படிக்கவிருந்த அறிக்கையையே பதிலாக கூறுவது தான் பேரவையின் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபாகும். ஆனால் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் காரணமாக எதிர்க்கட்சிகள் இந்த முடிவுக்கு எதிராக வெளிநடப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் படித்த அந்த அறிக்கையின் தொடக்கமே அவரது ஆட்சி காலமான 2001-2006ல் மின் தட்டுப்பாடே இல்லை என்பது தான்.
அதிமுகஆட்சியிலே மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கக் காரணம், 2001ம் ஆண்டுக்கு முன்பு, 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சி காலத்தில் "பேசின் பாலம்'' டீசல் எண்ணெய் மின் திட்டம், திருமூர்த்தி சிறு புனல் மின் திட்டம், முக்குருத்தி சிறு புனல் மின் திட்டம், சாமல்பட்டி டீசல் எண்ணெய் மின் திட்டம், திருமக்கோட்டை எரிவாயு சுழலி மின் திட்டம், பிள்ளைப் பெருமாள் நல்லுநுர் மின் திட்டம், சமயநல்லுநுர் டீசல் எண்ணெய் மின்திட்டம், ஆழியாறு சிறு புனல் மின் திட்டம், நெய்வேலி ஜீரோ ழூனிட் மின் திட்டம், வழுதுநுர் எரிவாயு மின் திட்டம், பெருஞ்சாணி சிறு புனல் மின் திட்டம் என்ற இந்த 11 திட்டங்களின் மூலம் 1,200 மெகாவாட் மின் உற்பத்திக்கு வழி வகை செய்ததால் தானே தவிர வேறல்ல.
எனவே மின் வாரியத்தின் வளர்ச்சிக்கு தான் திமுக ஆட்சி வழி வகுத்தது என்பதை இத்தனை ஆதாரங்களும் மெய்ப்பிக்கும் என்று நம்புகிறேன்.
ஜெயலலிதா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் தமிழக அரசுக்கு ஏராளமான கடன்களை திமுக ஆட்சியில் வாங்கி வைத்து விட்டதைப் போலச் சொல்லி வருகிறார். இதற்கு பலமுறை விளக்கமளிக்கப்பட்டும் கூட அதையே கூறி வருகிறார். 2006ம் ஆண்டு மே திங்களில் தான் திமுக ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பே, 31-3-2006 அன்றே, அதாவது ஜெயலலிதா ஆட்சி புரிந்த ஐந்தாண்டு காலத்திற்கு பின்பு, தமிழக அரசின் மொத்தக்கடன் பொறுப்பு 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாகும். அதுபோலவே தான் மின் வாரியத்திலும் 2005-2006ம் ஆண்டில் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமையை வைத்து விட்டுத்தான் ஜெயலலிதா ஆட்சியை விட்டு இறங்கினார்.
அரசு என்றால் கடன் வாங்கத்தான் நேரிடும். அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் கடன் வாங்கித்தான் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஜெயலலிதா வாங்கி வைத்து விட்டுப்போன கடன்களை அடைக்க வரி போடுகிறேன், பேருந்து கட்டணங்களை உயர்த்துகிறேன் என்றெல்லாம் நான் அப்போது சொல்லவில்லை.
ஏமாற்று வேலை:
ஜெயலலிதா அனைத்து எதிர்க்கட்சிகளும் கேட்டுக் கொண்டதை அடுத்து, தற்போது உயர்த்த எண்ணியிருந்த "உயர்வு''களில் ஓரளவு குறைத்து அறிவித்துள்ளார்.
7,874 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டண உயர்வுகளை அறிவித்து, தற்போது அதிலே வெறும் 740 கோடி ரூபாய் அளவிற்கு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 1 கோடியே 50 லட்சம் குடும்பங்கள் பயன் அடையும் என்று மக்களை ஏமாற்றிட முதல்வர் ஜெயலலிதா முனைந்துள்ளார்.
மாதந்தோறும் மின் கட்டணத்தைக் கட்டப் போகும் 1 கோடியே 50 லட்சம் குடும்பங்களும் நேரடியாக அந்தத் துன்பத்தை உணர்ந்து இந்த ஆட்சிக்குப் பாடம் புகட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மகாவீர் ஜெயந்தி-கருணாநிதி வாழ்த்து:
இந் நிலையில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அன்பையும், அருளையும், அறத்தையும் போதித்த மாமனிதராம் வர்த்தமான மகாவீரர் பிறந்த திருநாள் ஏப்ரல் மாதம் 5ம் நாள் நாடெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு 2611 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.மு.599ல் வட இந்தியாவிலுள்ள பீகார் மாநிலத்தில் ஓர் அரச குடும்ப வாரிசாகப் பிறந்து, வளர்ந்து, இளம் வயதிலேயே இல்லறத்தைத் துறந்து, தமது பொன்னையும், பொருளையும் ஏழைகளுக்கு வாரி வழங்கித் துறவு வாழ்க்கை மேற்கொண்டவர் வர்த்தமான மகாவீரர்.
மகாவீரர், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டியவர், எந்த ஓர் உயிரினத்திற்கும் இன்னல் இழைக்காமை, பொய் கூறாமை, பிறர் பொருளைக்களவு செய்யாமை போன்ற பல அருங்குணங்களை மனித சமுதாயத்தில் வளர்ப்பதையே கொள்கைகளாகத் கொண்ட ஜைன சமயத்தை வளர்த்தவர்.
அப்பெருமகன் வழியில், அவர் போதித்த கொள்கைகளையே தமது வாழ்வியல் நெறிகளாகப் பின்பற்றித் தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜைன சமுதாய மக்கள் அனைவருக்கும் அவர் பிறந்த நன்னாளில் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications