மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக 3-வது முறையாக பிரகாஷ் காரத் தேர்வு
கோழிக்கோடு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் காரத் அக்கட்சியின் பொதுச்செயலாளராக 3-வது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைப்ற்ற அக்கட்சியின் 20- வது தேசிய மாநாட்டில் இன்று பிரகாஷ் காரத் பொதுச்செயலராக தேர்வானார்.
2005-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பிரகாஷ்காரத் முதல் முறையாக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தமிழகத்தின் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் 2-வது முறையாகத் தேர்வானார்.
கோழிக்கோடு தேசிய மாநாட்டில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 700 பேராளர்களும் மத்தியக் குழுவின் 15 உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
3-ஆண்டுக்கு பொறுப்பு
இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து நிலையிலான செயலாளர்கள் பதவி என்பது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே என்ற திருத்தமும் கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக ஏற்கப்பட்டது..
இதனடிப்படையில் பிரகாஷ்காரத்துக்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.
புதிய மத்தியக் குழு
மீண்டும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ்காரத் புதிய மத்தியக் குழு உறுப்பினர்கள் விவரத்தை வெளியிட்டார்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சி.ஐ.டியூ தொழிற்சங்கத்தின் அகில இந்திய தலைவரான ஏ.கே. பத்மநாபன் இடம்பெற்றுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சூர்யகாந்த மிஸ்ரா, கேரள முன்னாள் அமைச்சர் எம்.ஏ. பாபி ஆகியோரும் புதுமுகங்களாவர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவில் கேரள முன்னாள் முதல்வரும் மூத்த இடதுசாரித் தலைவருமான அச்சுதானந்தன் இடம்பெறவில்லை. மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தொடர்ந்து இடம்பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications