புதுக்கோட்டையிலும் சங்கரன்கோவில் கதி தான்!: எதிர்க்கட்சிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் மிரட்டல்!

புதுக்கோட்டை சிபிஐ எம்எல்ஏ முத்துக்குமரன் மறைவையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. வழக்கமாக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ மறைந்தால், அந்தத் தொகுதியை அதே கட்சிக்கு விட்டுக் கொடுப்பது வழக்கம்.
ஆனால், இதிலும் அதிமுக புரட்சி படைக்கவுள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுகவே போட்டியிடவுள்ளது.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலையொட்டி மாதத்தில் கிட்டத்தட்ட 25 நாட்கள் அங்கேயே வசித்தவர் ஓ.பி. இந் நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலுக்கான வேலையையும் அவரது தலைமையில் இப்போதே ஆரம்பித்துவிட்டது அதிமுக.
அந்த மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி, 'மின் வெட்டுத் துறை'.. ஸாரி மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் ஓ.பி. பேசுகையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் எதிராக நின்றனர். ஆனால், தனித்து நின்ற அதிமுக 98 சதவீத வெற்றியைப் பெற்றது. இதன்மூலம் இந்திய அளவில் சுமார் ஒரு லட்சம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியாக அதிமுக திகழ்கிறது.
புதுக்கோட்டை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். அப்போது, இந்தத் தொகுதியில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடும் கட்சிகளுக்கு, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நேர்ந்த நிலைதான் ஏற்படும் என்றார்.
இந்த எச்சரிக்கை தா.பாண்டியனுக்கும் சேர்த்துத் தான்!. ஆனாலும் தொடர்ந்து அதிமுகவை ஆதரிக்க, தா.பா. நிச்சயம் ஒரு நொண்டி சாக்கு வைத்திருப்பார் என்பது மட்டும் நிச்சயம்.












Click it and Unblock the Notifications